Published : 28 Mar 2017 11:29 AM
Last Updated : 28 Mar 2017 11:29 AM

ராகுல் அரைசதம்; ரஹானே அதிரடியில் ஆஸி.யை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா

தரம்சலா டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோடு டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

இதன் மூலம் ஆஸ்திரேலியா வசம் இருந்த பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா தன் வசமாக்கியது இந்திய அணி. இந்த சீசனை 4-வது டெஸ்ட் தொடர் வெற்றியுடன் இந்திய அணி வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

19/0 என்று தொடங்கிய இந்திய அணி முரளி விஜய், புஜாரா விக்கெட்டுகளை இழந்தாலும் ராகுல் (51 நாட் அவுட்), ரஹானே (38 நாட் அவுட்) ஆகியோரின் ஆட்டத்தினால் 106/2 என்று 24-வது ஓவரில் வெற்றியைச் சாதித்தது. ரஹானே அமைதியாக இருந்தார், அரைசதம் கண்ட ராகுல், ஓகீஃப் பந்தை மிட்விக்கெட்டில் பஞ்ச் செய்து வெற்றிக்கான ரன்களை எட்டினார். 7 இன்னிங்ஸ்களில் ராகுல் 6-வது அரைசதம் எடுத்தார். சவாலான பிட்சில் சவாலான பந்து வீச்சில், சவாலான சூழ்நிலைகளை வெற்றிகரமாக எதிர்கொண்டு உண்மையில் ஒரு அருமையான டெஸ்ட் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா.

இந்திய அணியினர் குதூகலத்துடன் மைதானத்திற்குள் வந்து ஆஸி. வீர்ர்களுடன் கைகுலுக்கினர். இந்த உள்நாட்டு சீசனில் இந்திய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் வென்று 2-இல் டிரா செய்து ஒன்றில் தோற்றுள்ளது. டாஸ்களை இழந்த பிறகும் வெற்றி பெற்றது இந்திய அணியின் வெற்றியை நோக்கிய லட்சியார்த்தமே காரணம்.

இன்று காலை முதல் ஓவரிலேயே ஹேசில்வுட், விஜய்க்கு ஒரு பெரிய எல்.பி.முறையீடு எழுப்பினார். வெளியே பிட்ச் ஆனதால் அவுட் இல்லை. ரிவியூவும் செய்யவில்லை.இதற்கு அடுத்த பந்தே வெடிப்பில் பட்டு உள்ளே வர விஜய் மட்டை உள்விளிம்பில் பட்டதால் பிழைத்தார், கடந்த பந்தை விடவும் உரத்த எல்.பி.முறையீடாகும் இது, முரளி விஜய் தடுமாற்றத்துடன் தொடங்கினார்.

மறு முனையில் ஓகீஃப் ஒரு பந்தை தாறுமாறாக திருப்ப அது 4 பை ரன்களுக்குச் சென்றது. ராகுலும் தன் முதல் பவுண்டரியை எட்ஜில் எடுத்தார், ஸ்லிப்புக்கு மேல் சென்றது அது. பிறகு அடிக்கும் முனைப்பில் ராகுல், ஓகீஃப் பந்தை ஒரு அருமையான ஸ்கொயர் டிரைவ் மற்றும் ஒரு சக்திவாய்ந்த ஸ்வீப் பவுண்டரிகளை விளாசினார்.

12-வது ஓவரில் கமின்ஸ் வீசிய லெக் திசை எழுச்சிப் பந்து விஜய் கிளவ்வில் பட்டு கேட்ச் ஆனதை ஆஸி. அணி கவனிக்கவில்லை, முறையீடே செய்யவில்லை, அது அவுட், ஆனால் கேட்கவில்லை. விஜய் தப்பித்தார், விஜய்யின் உத்தியில் நிச்சயம் முன்னேற்றம் தேவை. பிறகு ஹேசில்வுட் ஷார்ட் பிட்ச் பந்தை புல் ஷாட்டில் பவுண்டரி அடித்தார் ராகுல்.

அடுத்த கமின்ஸ் ஓவரில் எப்போது வேண்டுமானாலும் என் விக்கெட் உனக்குத்தான் என்று ஆடிய முரளி விஜய்க் கமின்ஸ் பந்தை தொட்டு வேடிடம் கேட்ச் கொடுத்தார். 35 பந்துகள் வேதனையான இன்னிங்சில் விஜய் 8 ரன்களில் அவுட் ஆனார்.

அதே ஓவரில் திருப்பு முனை ஏற்பட்டு விடுமோ என்று ரசிகர்கள் அஞ்சும் விதமாக புஜாராவும், ராகுலும் ஒரு சிங்கிளுக்கு நடு பிட்சில் கபடி ஆட ரன்னர் முனையில் மேக்ஸ்வெல் ஸ்டம்பை நேர் த்ரோவில் பெயர்க்க புஜாரா 0-வில் ரன் அவுட்.46/2 என்ற நிலையில் பதற்றம் ஏற்பட கேப்டன் ரஹானே இறங்கினார்.

இறங்கியவுடனேயே ஆக்ரோஷம் காட்டிய ரஹானே, கமின்ஸை மிகவும் நேர்த்தியாக ஒரு நேர் டிரைவ் ஆடி பவுண்டரியும், அடுத்த பந்தே கமின்ஸின் ஷார்ட் பிட்ச் முயற்சியை ஹூக் செய்து பவுண்டரிக்கு விரட்டினார். மீண்டும் கமின்ஸையே ஃபைன் லெக்கில் பவுண்டரி விளாசினார்.

20-வது ஓவரில் கமின்ஸ் தொடர்ந்து பவுன்சர் வீசும் முயற்சியில் ரஹானேயிடம் சரியாக வாங்கிக் கட்டிக் கொண்டார், ஷார்ட் பிட்ச் பந்தை சச்சின் ஆடும் கோபக்கனல் ஹூக் ஷாட்டில் மிட் விக்கெட்டில் சிக்ஸ் விளாசினார் ரஹானே அடுத்த பந்து மீண்டும் உடலை நோக்கி பவுன்சர் வீசுவார் என்பதைக் கணித்த ரஹானே ஒதுங்கிக் கொண்டு கவரில் பிளாட் சிக்ஸ் விளாசினார். ஒன்று சச்சின் பாணி கோபம் மற்றொன்று சேவாக் பாணி விளாசல், இதுதான் ஆக்ரோஷத்தைக் காட்டும் விதம் என்று ரஹானே காட்டினார்.

கடைசியில் ரஹானே 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 27 பந்துகளில் 38 ரன்கள் என்று நாட் அவுட்டாகத் திகழ ராகுல் 76 பந்துகளில் 9 பவுண்டரியுடன் 51 நாட் அவுட். தொடரை இந்தியா 2-1 என்று கைப்பற்றி, பார்டர்-கவாஸ்கர் டிராபியை ஆஸ்திரேலியாவிடமிருந்து மீட்டது இந்திய அணி.

மிகவும் சவாலான தொடரில் இந்திய அணி ஒரு போட்டியை இழந்த பிறகு மீண்டு வந்து வென்றுள்ளது, கடந்த போட்டியில் ஆஸ்திரேலியா மன உறுதியுடன் டிரா செய்தது, ஆனால் இப்போட்டியில் குல்தீப் யாதவ்வின் முதல் நாள் பந்து வீச்சும், இந்திய அணியில் புஜாரா, ராகுல், ரஹானே, ஜடேஜா பேட்டிங்கும், நேற்று ஆஸி.யை அபாரப் பந்து வீச்சில் 137 ரன்களுக்குச் சுருட்டியதும் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பு செய்துள்ளது.

ஆட்ட நாயகன், தொடர் நாயகன் இரண்டு விருதுகளையும் ஜடேஜா தட்டிச் சென்றார். இந்தத் தொடரில் 25 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், 127 ரன்கள் அதில் இரண்டு அரைசதங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x