Published : 26 Jun 2017 03:54 PM
Last Updated : 26 Jun 2017 03:54 PM

அறிமுக வீரர் டேவிட் மலான் அதிரடியில் தெ.ஆ. அணியை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து

தென் ஆப்பிரிக்காவை 3-வது டி20 போட்டியில் வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்று கைப்பற்றியது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது, அறிமுகப் போட்டியில் ஆடிய டேவிட் மலான் என்ற இடது கை பேட்ஸ்மென் 44 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 78 ரன்கள் விளாசி அதிசயிக்கச் செய்தார்.

தென் ஆப்பிரிக்க அணியில் அதிகம் கேள்விப்படாத, ஆனால் தன் 4-வது டி20 போட்டியில் ஆடிய டேன் பேட்டர்சன் 32 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை மட்டுமே எடுத்து தொடரை இழந்தது.

இந்தப் போட்டியில் கேப்டன் மோர்கன் தான் ஆடாமல் புதிய வீரருக்கு வாய்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. ஜோஸ் பட்லர் கேப்டன் பொறுப்பில் செயல்பட்டார். டேவிட் மலான் தன் அறிமுகப் போட்டியில் ஆடினாலும் அனுபவ வீரர் போல்தான் ஆடினார், கிறிஸ் மோரிஸ் வீசிய, தான் எதிர்கொண்ட முதல் பந்தை ஆடாமல் விட்ட மலான், அடுத்த மோரிஸ் பந்தை புல் ஷாட்டில் சிக்ஸ் அடித்து திகைக்க வைத்தார். சக்தி வாய்ந்த ஷாட்களுடன் டைமிங், திடீர் புதிர் ஷாட்களை ஆடுவது என்று அவர் ஒரு தேர்ந்த டி20 வீரராகத் தெரிகிறார். இங்கிலாந்து வீரர் ஒருவரின் முதல் டி20 போட்டியில் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும் இது.

முன்னதாக மோர்னி மோர்கெலின் எழும்பிய பந்தை ஜேசன் ராய் (8) எட்ஜ் செய்து ஆட்டமிழந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் (36 ரன்கள், 28 பந்துகள் 2 பவுண்டரி, 2 சிக்ஸ்), மலான் இணைந்து 2-வது விக்கெட்டுக்காக 105 ரன்களை 63 பந்துகளில் சேர்த்தனர். 13-வது ஓவரில் ஹேல்ஸ் ஆட்டமிழந்தார், இவருக்கு 10 ரன்களில் கேட்சை விட்ட பெலுக்வயோவே ஹேல்ஸை கடைசியில் வீழ்த்தினார்.

தொடர்ந்து அசத்திய மலான் 31 பந்துகளில் அரைசதம் கண்டார். அதன் பிறகு 13 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். கடைசியில் 78 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்தை டீப்பில் அடித்து கேட்ச் ஆனார். ஜோஸ் பட்லர் இறங்கி தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை புரட்டி எடுத்து 22 பந்துகளில் 31 ரன்களை விளாசினார். பட்லர் இருந்ததால் 181 ரன்களை இங்கிலாந்து எட்டியது, இங்கிலாந்தின் பின்கள வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து 181 ரன்கள்.

தென் ஆப்பிரிக்கா இலக்கைத் துரத்திய போது டிவில்லியர்ஸ் தன் ஆக்ரோஷத்தைக் காட்டி 19 பந்துகளில் 2 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 35 ரன்களை எடுத்தார், குறிப்பாக இங்கிலாந்தின் அறிமுக இளம் லெக்ஸ்பின்னர் கிரேனை ஒரு ஓவரில் பதம் பார்த்தார். 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 16 ரன்களை விளாசினார், ஆனால் கிரேனிடமே அவுட்டும் ஆனார் டிவில்லியர்ஸ். அவர் அவுட் ஆகும் போது கூட தென் ஆப்பிரிக்கா 11 ஓவர்களில் 82 ரன்கள் என்று நல்ல நிலையில்தான் இருந்தது. முன்னதாக ஸ்மட்ஸ் 29 ரன்கள் எடுத்தார், இவர்கள் இருவர்தாம் டாப் ஆறு பேட்டிங்கில் இரட்டை இலக்கம் எட்டினர்.

கிறிஸ் மோரிசை முன்னதாக களமிறக்கிய உத்தி எடுபடவில்லை, அவர் 8 ரன்களில் ஜோர்டானிடம் வெளியேறினார். டேவிட் மில்லர், பெஹார்டீன் ஆகியோரையும் கிறிஸ் ஜோர்டான் வீட்டுக்கு அனுப்ப 91/6 என்று ஆனது தென் ஆப்பிரிக்கா.

கடைசியில் விக்கெட் கீப்பர் மங்காலிசோ மொசேல் பட்டையைக் கிளப்பினார், இவருடன் பெலுக்வயோவும் இணைந்தார். இருவரும் இணைந்து 54 ரன்களை 5 ஓவர்களில் சேர்த்தனர், டிஜே வில்லேயை அவரது கடைசி 2 ஓவர்களில் இருவரும் 34 ரன்களை வெளுத்துக் கட்டினர்.

மோசேல் 22 பந்துகளில் 1 பவுண்டரி 4 சிக்சருடன் 36 ரன்களையும் பெலுக்வயோ 20 பந்துகளில் 27 ரன்களையும் விளாசி நாட் அவுட்டாக திகழ்ந்தாலும் 162 ரன்களுக்கு மேல் செல்ல முடியவில்லை. டிவில்லியர்ஸ் ஆட்டமிழந்த உடனேயே தென் ஆப்பிரிக்க வாய்ப்புகள் மங்கத் தொடங்கின.

இங்கிலாந்து அணியில் ஜோர்டான் 3 விக்கெட்டுகளையும் கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர், தொடரை இங்கிலாந்து 2-1 என்று கைப்பற்றியது. ஆட்ட நாயகன் விருதை அறிமுக அதிரடி வீரர் டேவிட் மலான் தட்டிச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x