

ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சுத் தரவரிசையின் முதலிடத்தில் அஸ்வினுடன் இணைந்தார் ரவீந்திர ஜடேஜா. பவுலிங் தரவரிசையில் ஜடேஜா முதலிடம் பிடிப்பது இதுவே முதல் முறை.
நடந்து முடிந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் இந்திய வெற்றியைத் தீர்மானித்த ஜடேஜாவின் முதல் இன்னிங்ஸ் பந்து வீச்சில் அவர் 6 விக்கெட்டுகளை 63 ரன்களுக்குக் கைப்பற்றியதால் பெற்ற தரவரிசைப்புள்ளிகளின் அடிப்படையில் அவர் முதலிடம் பெற்றார்.
இதற்கு முன்னர் 2008-ல் முரளிதரன், டேல் ஸ்டெய்ன் இருவரும் முதலிடம் பிடித்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பேட்டிங்கில் சொதப்பி வரும் விராட் கோலி இந்தத் தொடரில் 40 ரன்களையே மொத்தமாக இதுவரை எடுத்துள்ளார், இதனால் 2-வது இடத்தை அவர் ஜோ ரூட்டுக்கு அளிக்க வேண்டியதாயிற்று..
புஜாரா பெங்களூருவில் 17 மற்றும் 92 ரன்களை எடுத்ததால் 5 இடங்கள் முன்னேறி 6-ம் இடத்திற்கு வந்துள்ளார். ரஹானே 2 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தில் உள்ளார்.
கே.எல்.ராகுல் இந்தத் தொடரில் அருமையாக ஆடி வருவதால் அவர் 23 இடங்கள் முன்னேறி 23-ம் இடம் பிடித்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார், 77 டெஸ்ட் போட்டிகளாக அவர் முதலிடத்தில் நீடித்து வருகிறார், இதன் மூலம் 76 டெஸ்ட் போட்டிகளுக்கு முதலிடம் வகித்த ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார் ஸ்மித்.
ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஷாகிபுல் ஹசன் அஸ்வினைப் பின்னுக்குத்தள்ளினார்.
ஐசிசி அணிகள் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.