Published : 02 Jan 2016 08:57 AM
Last Updated : 02 Jan 2016 08:57 AM

500வது போட்டியில் களமிறங்கிய மெஸ்ஸி

பார்ஸிலோனா அணிக்காக தனது 500வது போட்டியில் களமிறங்கினார் லயோனல் மெஸ்ஸி. ஸ்பானீஷ் லீக்கில், ரியல் பெடிஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பார்சிலோனா அணிக்காக 425 கோல் அடித்தும் அவர் சாதனை படைத்தார்.

கேம்ப்நியூ மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பார்ஸிலோனா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 29வது நிமிடத்தில் ரியல் பெடிஸ் அணி சேம்சைடு கோல் அடித்தது. 33-வது நிமிடத்தில் மெஸ்ஸி ஒரு கோல் அடித்தார்.

பார்ஸிலோனா அணிக்காக மெஸ்ஸி அடித்த 425 -வது கோல் இதுவாகும். சவுரஸ் 46 மற்றும் 83- வது நிமிடத்தில் கோல்கள் அடித்தார். பார்ஸிலோனா அணிக்காக அதிக போட்டியில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் மெஸ்ஸி 6வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் ஓய்வு பெற்ற சேவி ஹெர்னான்டஸ் முதலிடத்தில் உள்ளார். அவர் 767 போட்டிகளில் விளையாடி உள்ளார். தற்போது ஸ்பானீஷ் லீக்கில் பார்ஸிலோனா 38 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

--------------------------------------------------

சென்னை மாவட்ட கைப்பந்து அணிகள் நாளை தேர்வு

மாநில இளையோர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவாரூரில் ஜனவரி 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான சென்னை மாவட்ட இளையோர் அணி (ஆடவர், மகளிர்) தேர்வு நாளை மாலை 3 மணிக்கு எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.

1-1-1995-ம் ஆண்டு மற்றும் அதற்கு பிறகு பிறந்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ள தகுதியானவர்கள். வீரர், வீராங்கனைகள் உரிய வயது சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்தகவலை சென்னை மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன் தெரிவித்தார்.

--------------------------------------------------

சென்னையில் கோல்ப் போட்டி

சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டும் வகையில் மெட்ராஸ் ரவுண்ட் டேபிள் 1 சார்பில் கோல்ப் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த போட்டி வரும் 9ம் தேதி கிண்டியில் உள்ள மெட்ராஸ் ஜிம்கானா கோல்ப் கிளப்பில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் இலங்கையை சேர்ந்த தொழில்முறை வீரர்கள் 20க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இந்தியாவின் நட்சத்திர வீரரும் தரவரிசையில் 38வது இடத்தில் உள்ளவருமான அனிர்பன் லஹிரி, ஷிவ்கபூர், முனியப்பா, கவுரவ்ஜிஹி, ஷிகா ரங்கப்பா, மனவ்ஜெயினி, பிரதாப் அத்வால், அபிஷேக் ஜா, ரஹில் கங்ஜி, சுஜன் சிங், ஹலின் ஜோஸி, அர்ஜூன் சிங், திரிசூல் சின்னப்பா, ரஜிவ் தத்தார், கரண் வாசுதேவ் மற்றும் இலங்கையின் மிதுன் பெரேரா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

--------------------------------------------------

சென்னை ஓபன் தகுதி சுற்று இன்று தொடக்கம்

20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி வரும் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியின் ஒற்றையர் பிரிவில் 32 வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில் 28 பேர் நேரடித் தகுதி பெற்றுவிட்ட நிலையில், 4 பேர் தகுதிச்சுற்றின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த தகுதி சுற்று ஆட்டம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதில் 16 வீரர்கள் பேர் பங்கேற்கின்றனர். இந்தியாவின் சோம்தேவ், சனம் சிங், சாகேத் மைனேனி உள்ளிட்ட 14 பேர் நேரடித்தகுதி பெற்றுள்ளனர். மற்ற இந்திய வீரர்களான விஜய் சுந்தர் பிரசாந்த், பிரஜ்னீஷ் குணேஷ்வரன் ஆகியோர் வைல்ட்கார்டு மூலம் பங்கேற்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x