Published : 20 Jun 2015 09:47 AM
Last Updated : 20 Jun 2015 09:47 AM

வங்கதேச பவுலர்களுக்கு தோனி பாராட்டு

இந்தியா-வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 307 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பின்னர் பேட் செய்த இந்திய அணி 46 ஓவர்களில் 228 ரன்களுக்கு சுருண்டது.

வங்கதேசத்திடம் 79 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது குறித்துப் பேசிய இந்திய கேப்டன் தோனி, “இந்த தோல்வி எங்கள் அணியினரின் நம்பிக்கையை குலைத்திருக்கிறது. அதேநேரத்தில் வங்கதேச பவுலர்கள் இந்த மெதுவான ஆடுகளத்தில் நல்ல பவுன்சர் களையும், பல்வேறு வகையான பந்துவீச்சையும் கையாண்டனர்.

போட்டியின்போது எதிரணியை கணித்து சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அணியே வெற்றி பெறும். இன்று நாங்கள் விளையாடியதைவிட வங்கதேசம் மிகச்சிறப்பாக ஆடியது. அதேபோன்று அந்த அணியின் பவுலர்கள் தங்களுடைய பந்துவீச்சில் வித்தியாசத்தை கையாண்டனர். ஒரு பந்தை 140 கி.மீ. வேகத்திலும், அடுத்த பந்தை 115 கி.மீ. வேகத்திலும் வீசினர். அவர்கள் கலவையான பந்துவீச்சை பயன்படுத்தினர். எங்கள் பவுலர்களுடன் ஒப்பிடும்போது, வங்கதேச பவுலர்கள் அதிக அளவில் பவுன்சர்களை வீசினர்.

மெதுவான ஆடுகளத்தில் பவுன்சர்களை எதிர்கொள்வது மிகவும் கடினம். ஏனெனில் பந்துகள் எழும்பி வரும். அதேநேரத்தில் பேட்ஸ்மேன் களுக்கு அந்த பந்தை எதிர்கொள்ள போதுமான அவகாசம் இருக்காது.

நல்ல பார்ட்னர்ஷிப் அமையும்பட்சத்தில் நடுவரிசை மற்றும் பின் வரிசை பேட்ஸ்மேன்கள் வெற்றிக்கு தேவையான எஞ்சிய ரன்களை எளிதாக குவிக்க முடியும். ஆனால் நாங்கள் நடுவில் விக்கெட்டுகளை இழந்துவிட்டதாக நினைக்கிறேன். 300 அல்லது 305 ரன்கள் என்ற இலக்கை துரத்தும்போது பார்ட்னர்ஷிப் மிக முக்கியமானதாகும். ஆனால் எங்களால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x