Last Updated : 22 Jan, 2017 01:10 PM

 

Published : 22 Jan 2017 01:10 PM
Last Updated : 22 Jan 2017 01:10 PM

கடைசி ஒருநாள் போட்டியில் இன்று மோதல்: ஒயிட்வாஷ் முனைப்பில் இந்திய அணி

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

புனேவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 3 விக்கெட்கள் வித்தியா சத்திலும், கட்டாக் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2-0 என கைப்பற்றியது. தொடரை முழுமையாக 3-0 என கைப்பற்றும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது இந்திய அணி.

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பங்கேற்கும் கடைசி ஒருநாள் போட்டி இதுதான். இதனால் இந்த ஆட்டத்தை சரியான முறையில் இந்திய வீரர்கள் பயன்படுத்திக்கொள்ளக்கூடும்.

கடந்த இரு ஆட்டத்திலும் இந்திய அணி ரன்வேட்டையாடியது. முதல் ஆட்டத்தில் கோலியும், கேதார் ஜாதவும் அசத்த, அடுத்த ஆட்டத் தில் யுவராஜ்சிங்கும், தோனியும் மிரட்டினர். மூத்த வீரர்கள் அதிரடி பார்முக்கு திரும்பி இருப்பது அணியின் பலத்தை அதிகரித் துள்ளது.

சமீபகாலமாக மோசமாக விளையாடி வரும் ஷிகர் தவண் இந்த தொடரில் முதல் ஆட்டத்தில் 1 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதற்கிடையே அவருக்கு விரல் பகுதியில் காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நேற்று நீண்ட நேரம் வலை பயிற்சியில் ஈடுபட்டார்.

மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுலுக்கும் இந்த தொடர் சிறப்பாக அமையவில்லை. அவர் இரு ஆட்டங்களிலும் சேர்த்து 13 ரன்களே சேர்த்துள்ளார். இதனால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் ராகுல்.

டெஸ்ட் தொடரில் படுதோல்வி களை சந்தித்த இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டி தொடரிலும் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. முதல் ஆட்டத்தில் 351 ரன்களை இலக்காக கொடுத்த போதும் அந்த அணியால் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது.

கட்டாக் போட்டியில் 382 ரன்கள் இலக்கை ஆரம்பத்தில் இருந்து அதிரடியாக துரத்திய நிலையில் கடைசி கட்டத்தில் கோட்டை விட்டது. கேப்டன் மோர்கன் 81 பந்தில் 102 ரன்கள் விளாசிய நிலையில் ரன் அவுட் ஆனதும், கடைசி ஓவரை புவனேஷ்வர் குமார் நேர்த்தியாக வீசியதும் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு தடைக்கல்லாக அமைந்தன.

இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. கட்டாக் போட்டியில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 747 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியாமல் 60 ரன்களை தாரை வார்த்தார்.

ஆல்ரவுண்டரான அவர் இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபியில் முக்கிய பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால் இன் றைய ஆட்டத்தில் சிறந்த திறனை வெளிப்படுத்த முயற்சிக்க கூடும்.

இதேபோல் இங்கிலாந்து அணி யில் மதிப்பு வாய்ந்த வீரராக கருதப்படும் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங்கில் சிறப்பாக செயல் பட்டாலும் கடந்த இரு ஆட்டங் களிலும் பந்து வீச்சில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான லயிம் பிளங்கெட், கட்டாக் ஆட்டத் தில் 91 ரன்களை வாரி வழங்கியிருந்தார்.

மேலும் இங்கிலாந்து கேப்டன் மோர்கன் எந்த நேரத்தில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என்பதிலும் தடுமாற்றம் அடைகிறார். கட்டாக் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் முதல் ஸ்பெல்லில் 5 ஓவர்கள் வீசி 3 மெய்டன்களுடன் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை சாய்த்தார்.

திறம்பட செயல்பட்ட அவரை அதன் பின்னர் 39-வது ஓவரில்தான் மோர்கன் பயன்படுத்தினார். இந்த இடைப்பட்ட ஓவர்களில் இந்திய அணி வீரர்கள் எளிதாக ரன்களை சேர்த்தனர்.

மேலும் சிலிப் திசையில் நிறுத்தியிருந்த பீல்டரை அகற்றியதால் தோனி, யுவராஜ் சிங் ஆகியோர் தலா ஒரு முறை ஆட்டமிழக்கும் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தனர். பந்து வீச்சிலும், பீல்டிங் யுக்தியிலும் இங்கிலாந்து அணி கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில் ஆறுதல் வெற்றியை பெறலாம்.

அணிகள் விவரம்:

இந்தியா:

விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவண், யுவராஜ் சிங், தோனி, அஜிங்க்ய ரஹானே, மணீஷ் பாண்டே, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், அமித் மிஸ்ரா.

இங்கிலாந்து:

மோர்கன் (கேப்டன்), ஜேசன் ராய், அலெக்ஸ் ஹெல்ஸ், ஜோ ரூட், ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், ஜேக் பால், லயிம் டாவ்சன், ஜானி பேர் ஸ்டோவ், சேம் பில்லிங்ஸ், லயிம் பிளங்கெட்.

‘ரோஹித்தின் 264’

ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா கடைசியாக 2014 நவம்பர் 13-ம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாடியது. ரோஹித் சர்மா 264 ரன்கள் விளாச இந்திய அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 404 ரன்கள் குவித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

கோலி இடத்தில் தோனி

இந்திய அணி வீரர்கள் நேற்று சுமார் 2 மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டனர். இது கட்டாய பயிற்சி இல்லை என்பதால் கேப்டன் கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இதனால் தோனி தலைமையில் வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். ஆடுகளத்தையும் ஆய்வு செய்த தோனி அதுகுறித்து பந்து வீச்சாளர்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இந்த பயிற்சியில் அஸ்வின், யுவராஜ் சிங், கே.எல்.ராகுல், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x