

லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு பழிதீர்த்த இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 330 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஓல்ட் டிராபர்ட் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் பாகிஸ்தான் தன் 2-வது இன்னிங்சில் 565 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கி 234 ரன்களுக்குச் சுருண்டது.
இதன் மூலம் தொடர் 1-1 என்று சமன் ஆகியுள்ளது. ஓரளவுக்கு பவுன்ஸ் உள்ள ஆடுகளத்தில் பாகிஸ்தான் பேட்டிங் பலவீனத்தை ஆண்டர்சன், கிறிஸ் வோக்ஸ் வெளியே கொண்டு வர மொயின் அலி 3 விக்கெட்டுகள் மூலம் பாகிஸ்தான் அடக்கப்பட்டது.
முன்னதாக இங்கிலாந்து தன் 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. ஜோ ரூட் 48 பந்துகளில் 71 ரன்களையும், அலைஸ்டர் குக் 78 பந்துகளில் 76 ரன்களையும் விளாச, 30 ஓவர்களில் 173 ரன்கள் என்ற நிலையில் டிக்ளேர் செய்தார்.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி ஷான் மசூத் (1), அசார் அலி (8) ஆகியோர் விக்கெட்டை ஸ்விங் ஆண்டர்சனிடம் இழந்தது. ஷான் மசூத்தை 6 முறை வீழ்த்தியுள்ளார் ஆண்டர்சன். யூனிஸ் கான், மொகமது ஹபீஸ் இணைந்து 3-வது விக்கெட்டுக்காக 58 ரன்கள் சேர்த்தனர். 3 ரன்களில் யூனிஸ் கான் ஆட்டமிழந்திருக்க வேண்டியது, ஆனால் அலைஸ்டர் குக் கையில் வந்த கேட்சை விட்டார்.
ஹபீஸ் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 42 ரன்கள் எடுத்த நிலையில் மொயீன் அலி பந்து ஒன்று ஆஃப் ஸ்பின் ஆகி மட்டையின் உள் விளிம்பில் பட்டு ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது. ஹபீஸ் 42 ரன்களில் பெவிலியன் திரும்பினார். யூனிஸ் கான் 28 ரன்களில் காலியானார். இவரையும் மொயீன் அலி வீழ்த்தினார்.
மிஸ்பா உல் ஹக் 71 பந்துகள் போராடி 2 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் பவுல்டு ஆகி வெளியேறினார். 145/5 என்ற நிலையில் மீதி விக்கெட்டுகள் சம்பிரதாயமானது. கடைசியில் மொகமது ஆமிர் 29 ரன்களை எடுத்தார். ஆனால் 70.3 ஓவர்களில் 234 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் 330 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. ஆண்டர்சன், வோக்ஸ், மொயீன் அலி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரூட் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 325 ரன்களை விளாசி பாகிஸ்தானிடமிருந்து ஆட்டத்தைப் பறித்த ஜோ ரூட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸிலேயே பாகிஸ்தானிடமிருந்து போட்டியைப் பறித்து கொண்டு சென்றது என்றே கூற வேண்டும்.
அடுத்து வரும் எட்ஜ்பாஸ்டன், ஓவல் மைதானங்களிலும் பாகிஸ்தான் இத்தகைய பிட்ச், பவுலிங், பேட்டிங்கை இங்கிலாந்திடம் எதிர்பார்க்கலாம்.