

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் 22-வது தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஆடவர் ஹாக்கிப் போட்டியின் காலிறுதியில் மதுரை அமெரிக்கன் கல்லூரி 2-0 என்ற கோல் கணக்கில் பாரதியார் பல்கலை. அணியையும், காருண்யா பல்கலை. 4-0 என்ற கோல் கணக்கில் கோவை பி.எஸ்.ஜி.டெக் அணியையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறின.
கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கோவை ராமகிருஷ்ணா மிஷன் 5-3 என்ற கோல் கணக்கில் மலப்புரம் எம்.இ.எஸ். அணியையும், அண்ணாமலை பல்கலை. அணி 2-0 என்ற கோல் கணக்கில் கோழிக்கோடு சமோரின் கல்லூரியையும் தோற்கடித்தன.
ஆடவர் வாலிபால் போட்டியின் லீக் சுற்றில் சென்னை லயோலா கல்லூரி, காருண்யா பல்கலை. அணிகளும், மகளிர் வாலிபால் லீக் சுற்றில் எஸ்.ஆர்.எம். பல்கலை., ஜேப்பியார் கல்லூரி அணிகளும் வெற்றி கண்டன. மகளிர் கபடியில் ஈரோடு நவரசம் சிஏஎஸ் கல்லூரி, பிகேஆர் கலைக்கல்லூரி அணிகளும், ஆடவர் கபடியில் சென்னை டி.பி.ஜெயின் கல்லூரி, காருண்யா பல்கலை. அணிகளும், மகளிர் கூடைப்பந்து போட்டியில் சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவ கல்லூரி, பெங்களூர் ஜெயின் பல்கலை. அணிகளும் வெற்றி பெற்றன.