Published : 25 Oct 2013 07:05 PM
Last Updated : 25 Oct 2013 07:05 PM

இந்தியாவுக்கு நெருக்கடி: 5-வது போட்டியிலும் மழை அச்சுறுத்தல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள 5-வது ஒருநாள் போட்டியிலும் மழை அச்சுறுத்தல் இருப்பதால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருாள் கிரிக்கெட் போட்டி ஒடிசா மாநிலம் கட்டக் நகரில் சனிக்கிழமை நடைபெறுகிறது.

ஒடிசாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் இந்தப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே 4-வது போட்டி மழையால் கைவிடப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. அதனால் இந்தப் போட்டியில் வெற்றி கண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

ஆனால், கட்டக்கில் நடைபெறவுள்ள 5-வது போட்டியும் மழையால் கைவிடப்படக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை இந்தப் போட்டி மழையால் கைவிடப்படுமானால் அடுத்த இரு போட்டிகளிலும் வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை வெல்ல முடியும்.

ஆந்திரத்தின் தெலங்கானா பகுதிகளில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக ஒடிசாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேலும் இரு நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர் மழை காரணமாக கட்டக் பாரபட்டி மைதானத்தின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் வெள்ளிக்கிழமை மாலை வரை இரு அணி வீரர்களுமே பயிற்சியில் ஈடுபடவில்லை.

மைதானத்திலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக மைதான ஊழியர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். 1996-ல் இங்கு நடைபெறவிருந்த இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது. அதேபோன்ற நிலை இந்தப் போட்டியிலும் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் ஒடிசா கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.

மழை நீரை துரிதமாக வெளியேற்ற பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், கனமழை பெய்யும் பட்சத்தில் போட்டியை கைவிடுவதைத் தவிர வேறு வழி கிடையாது. எனவே மழை பெய்யாதிருந்தால் மட்டுமே இந்தப் போட்டி நடைபெறுவது சாத்தியம். இந்தப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருந்தபோதிலும், 45 ஆயிரம் டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x