

தோனியுடனோ அல்லது அணியின் சகவீரர்களுடனோ எந்த கருத்து வேறுபாடு இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கௌதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார்.
இந்திய அணியில் மூத்த வீரர்களான கம்பீர், சேவாக் ஆகியோர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்கள் சரியாக விளையாடாதும், இளம் வீரர்கள் திறமையாக விளையாடி வருவதும்தான் இந்த புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
எனினும் கேப்டன் தோனியுடன், கம்பீர், சேவாக் ஆகியோருக்கு ஏற்பட்ட கருத்துவேறுபாடும் இவர்கள் அணியில் சேர்க்கப்படாததற்கு மற்றொரு காரணம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய கம்பீர் குறித்து பிசிசிஐ-யிடம் தோனி புகார் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
அணியின் நலனுக்காக விளையாடாமல், அணியில் தனது இடத்தை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக கம்பீர் விளையாடி வருகிறார் என்று தோனி அப்போது புகார் தெரிவித்துள்ளார். இதேபோல கம்பீர், சேவாக் ஆகியோர் மறைமுகமாக தோனிக்கு எதிராக அப்போது சில கருத்துகளைத் தெரிவித்தனர். அந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது என்பது நினைவுகூரத்தக்கது.
இப்போது நியூஸிலாந்து செல்லும் இந்திய அணியிலும் சேவாக், கம்பீருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இவர்கள் இருவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையும் இத்துடன் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது.
இது தொடர்பாக கம்பீர் கூறியுள்ளது: இந்திய கிரிக்கெட் அணிக்குள் மோதல் இருந்தது என்று கூறப்படுவது ஏதோ ஒரு தனிநபரின் அதீதமான கற்பனைதான். எனக்கும் தோனிக்கும் இடையிலோ அல்லது சேவாக், யுவராஜ் மற்றும் ஹர்பஜன் சிங் இடையிலோ எந்த கருத்து வேறுபாடுகளும் இல்லை.
சரியான பார்மில் இல்லாதது முழு உடல் தகுதி பெறாதது போன்றவை நாங்கள் அணியில் சேர்கப்படாததற்கு காரணமாக இருக்கலாம் என்றார்.
அதிக சம்பளம் வழங்கப்படும் ஏ பிரிவு வீரர்கள் பட்டியலில் இருந்து சற்று குறைவான சம்பளம் பெறும் பி பிரிவு பட்டியலுக்கு கம்பீரை பிசிசிஐ மாற்றியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்திய கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை தவிர மற்ற அனைத்து வீரர்களுமே தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர்கள்தான். எனவே இது சகஜமான விஷயமே என்றார் கம்பீர்.