

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோ வில் அடுத்த மாதம் 5-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக கருதப்படும் இந்த போட்டிக்கு இந்தியாவில் இருந்து 13 வகையான விளையாட்டு பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்கள் அனைவரையும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் உள்ள மானக்ஸா மையத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வழியனுப்பு விழாவாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் துப்பாக்கி சுடுதல் வீரர்கள் ஜித்து ராய், மானவ்ஜித் சிங் சந்து, ஹீனா சித்து, பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, காந்த், குத்துச்சண்டை வீரர் சிவா தபா, தடகள வீராங்கனைகள் சுதா சிங், லலிதா பாபர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் பிரதமரின் வாழ்த்தைப் பெற்றதுடன், அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். சிந்து தனது பாட்மிண்டன் ராக்கெட்டில் பிரதமரிடம் ஆட்டோகிராப் பெற்றார்.
இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் தலைமை பயிற்சியாளர் நெய்ல் ஹாவ்குட்டுடனும் கலந்து கொண்டனர். பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்த், குத்துச்சண்டை பயிற்சியாளர் குர்பாக்ஸ் சிங் சந்து ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். வீரர்கள் ஒவ்வொருவரையும் சந்தித்த பிரதமர், ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங், செயலாளர் ராஜீவ் யாதவ், அகில இந்திய விளையாட்டு கவுன்சில் தலைவர் விஜய் மல்கோத்ரா, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் ராமச்சந்திரன், பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா, ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா, பொதுச்செயலாளர் முகமது முஸ்டாக் அகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்காக வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருவதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.