Published : 11 Apr 2017 09:48 AM
Last Updated : 11 Apr 2017 09:48 AM

2-வது ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அபார வெற்றி- பாபர் அசாம் புதிய சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

பாகிஸ்தான் அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. பாகிஸ்தானுக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையே நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கயானா நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது.

டாஸில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தது. இதைத்தொடர்ந்து ஆடவந்த பாகிஸ்தான் அணி, தொடக்க ஆட்டக்காரர்களான அஹமத் ஷென்சாத் (5 ரன்கள்), கம்ரான் அக்மல் (21 ரன்கள்) ஆகியோரின் விக்கெட்களை அடுத் தடுத்து இழந்தது. இந்நிலையில் 3-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய பாபர் அசாம், தூண் போல் உறுதியாக நின்று மேற்கிந்திய தீவின் பந்துவீச்சுகளை எதிர்கொண்டார்.

ஒருபுறம் உறுதியாக நின்ற அவர் கடைசிவரை அவுட் ஆகாமல் 132 பந்துகளில் 125 ரன்களைச் சேர்த்தார். அவருக்கு உதவியாக முகமது ஹபீஸ் 32 ரன்களையும், இமாத் வாசிம் 43 ரன்களையும் சேர்த்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 282 ரன்களை சேர்த்தது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் காப்ரியல் 2 விக்கெட்களையும், ஜோசப், பிஷு, நர்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இதைத் தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆட்டத்தின் ஆரம்பம் முதலே தடுமாறத் தொடங்கியது அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான லீவிஸ் 13, வால்டன் 10, ஹோப் 15, பவல் 11, கார்ட்டர் 12, முகமது 1 ரன்களில் ஆட்டம் இழந்தனர். அணியின் கேப்டனான ஹோல்டரும் (68 ரன்கள்) நர்சும் (44 ரன்கள்) தோல்வியைத் தவிர்க்க சிறிது நேரம் போராடினர். ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியைக் காப்பாற்ற இது போதுமானதாக இல்லை. 44.5 ஓவர்களிலேயே அந்த அணி 208 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணி 74 ரன்களில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. பாகிஸ்தான் அணியில் ஹசன் அலி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இந்த 2 அணிகளுக்கும் இடையிலான 3-வது போட்டி இன்று நடக்கிறது.

பாபர் அசாம் சாதனை

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 125 ரன்களைக் குவித்ததுடன் மிகக் குறைந்த போட்டிகளில் 5 சதங் களை அடித்த 2-வது வீரர் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார். 25 ஒருநாள் போட்டி களில் அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டீ காக் 19 போட்டிகளில் 5 சதங்களை விளாசியுள்ளார்.

1306 ரன்களைக் குவித் துள்ள பாபர் அசாம் இதுபற்றி கூறும்போது, “ஒவ்வொரு போட்டி யிலும் கடைசி பந்துவரை நான் பேட்டிங் செய்ய விரும்புகிறேன். இதன்மூலம் என் அணியின் வெற் றிக்கு என்னால் முடிந்த பங்க ளிப்பைக் கொடுப்பேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x