Published : 14 Oct 2014 04:37 PM
Last Updated : 14 Oct 2014 04:37 PM

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் விசித்திர கேட்சை அனுமதித்தது ஏன்? - ஐசிசி விளக்கம்

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த விசித்திர கேட்ச் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

கடைசி ஓவரில் 2 ரன்களை எடுக்க முடியாமல் 2 விக்கெட்டுகளைப் பறிகொடுத்து, பாகிஸ்தான் தோற்ற 3-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் பிடித்த கேட்ச் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

நடந்தது என்ன?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ரன்கள் வெற்றி இலக்கத் துரத்தி வந்தது. அப்போது ஆட்டத்தின் 18-வது ஓவரில் ஆஸ்திரேலிய வீரர் சேவியர் டோஹெர்ட்டி பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார். பாகிஸ்தான் இடது கை பேட்ஸ்மென் பவாத் ஆலம் எதிர்கொண்டார்.

இடது கை பேட்ஸ்மெனுக்கு ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்தார் ஸ்டீவ் ஸ்மித். பவாத் ஆலம் பந்தை ஸ்வீப் செய்ய ஆயத்தமானவுடன் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித் லெக் ஸ்லிப்பிற்கு ஓடினார். அப்போது பந்து வீசப்பட்டு வந்து கொண்டிருந்தது. ஸ்டீவ் ஸ்மித் லெக்ஸ்லிப்பிற்குச் செல்வதை பவாத் ஆலம் கவனிக்க வாய்ப்பில்லை. இந்த நிலையில் ஷாட்டும் சரியாகச் சிக்கவில்லை. பந்தை லெக் ஸ்லிப் திசையில் ஸ்டீவ் ஸ்மித் மிக எளிதாக கேட்ச் ஆக்கினார்.

இப்படிச் செய்ய முடியுமா ஒரு பீல்டர்? விதிமுறை அவருக்குச் சாதகமா? என்ற கேள்விகளுடன் பவாத் ஆலம் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நிற்க, கள நடுவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டு பவாத் ஆலம் அவுட் என்று தீர்ப்பளித்தனர்.

விதிமுறைகள் என்ன கூறுகிறது?

பந்து வீசப்பட்டு அது பேட்ஸ்மெனை வந்தடைந்து அவர் அதை ஆடுவதற்கு முன்பாக எந்த ஒரு பீல்டரும் தங்கள் இடத்தை விட்டு நகர்வது கூடாது. இப்படி நடந்ததாக நடுவர்கள் கருதும் அத்தகைய தருணத்தில் பந்தை ‘டெட் பால்’ என்று அறிவிக்க வேண்டும்.

இந்த விதிமுறையின்படி ஸ்மித் பிடித்த கேட்சை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் ஐசிசி சமீபமாக இந்த விதிமுறையை சற்றே தளர்த்தியுள்ளது. அதாவது பேட்டிங் செய்பவரின் பந்துக்கான முன்கூட்டிய நகர்தலுக்கு ஏற்ப, பந்து ஸ்ட்ரைக்கரை அடையும் முன்பே, அருகில் இருக்கும் பீல்டர் தங்களது நிலையை மாற்றிக்கொள்ளலாம் என்று விதிமுறையை ஐசிசி தளர்த்தியுள்ளது. அதன்படி ஸ்மித் ஸ்லிப்பிலிருந்து லெக் ஸ்லிப்பிற்கு நகர்ந்து கேட்ச் பிடித்தது செல்லும் என்று ஐசிசி கூறியுள்ளது.

ஆனால் அருகே நிற்கும் பீல்டரின் இப்படிப்பட்ட முன் தீர்மானிக்கப்பட்ட நகர்தல் பேட்ஸ்மெனை ஏமாற்றும் வேலையாக இருக்கிறது என்று கள நடுவர்கள் அந்த நகர்வுக்கு விளக்கம் அளித்தால் அது செல்லாது. ஸ்மித் விவகாரத்தில் அவர் செய்தது சரியே என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x