

கேப்டவுனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று தென் ஆப்பிரிக்கா அணி தன் முதல் இன்னிங்சில் 392 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
குவிண்டன் டி காக் அதிரடி முறையில் சதம் எடுத்தார், இலங்கையின் 19-வயது லாஹிரு குமாரா 122 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
விட்டுக் கொடுக்காத போர்க்குணம் மிக்க ஒரு வேகப்பந்து வீச்சாளரை லாஹிரு குமாரா மூலம் இலங்கை அடையாளம் கண்டுள்ளது. அதுவும் ஆம்லாவின் சுவர் போன்ற தடுப்பாட்டத்தை முறியடித்து அவரை பவுல்டு செய்தது அதே ஓவரில் டுமினியையும் வீழ்த்தியது என்று லாஹிரு அசத்தினார், இன்று சத நாயகன் குவிண்டன் டி காக் விக்கெட்டையும் அவர் வீழ்த்தினார்.
குவிண்டன் டி காக் 124 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து சந்திமாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேற பிலாண்டர், ரபாடா ஆகியோரையும் குமாரா வீழ்த்தினார். 19 வயது குமாரா தனது 3-வது டெஸ்ட் போட்டியிலேயே அயல் மண்ணில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இலங்கையின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது பவுலரான ஹெராத் 2 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்ற தென் ஆப்பிரிக்கா தன் முதல் இன்னிங்ஸில் சற்று முன் 392 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தற்போது கருண ரத்ன, சில்வா ஆடத் தொடங்கி இலங்கை விக்கெட் இழப்பின்றி 14 ரன்கள் எடுத்துள்ளது.