

ஒலிம்பிக் குத்துச்சண்டை தகுதி போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீரர் நீரஜ் கோயட் முன்னேறினார்.
சர்வதேச குத்துச்சண்டை கூட்டமைப்பு சார்பில் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி வெனிசுலாவின் வர்காஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 69 கிலோ எடைப்பிரிவில் 24 வயதான இந்திய வீரர் நீரஜ் கோயட் பங்கேற்றார்.
நேற்று நடைபெற்ற காலிறுதியில் கிரீஸ் வீரர் டிமிட்ரியாசை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார் நீரஜ். அவர் அரையிறுதியில் ஜெர்மனியின் அராஜிக்கை நாளை எதிர்த்து விளையாடுகிறார். தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அராஜிக் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் பட்சத்தில், ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு நீரஜ் கோயட் தகுதி பெறலாம். ஒருவேளை இதில் தோல்வியடைந்தால் நீரஜ் கோயட்டுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கும். அரையிறுதியில் தோற்ற மற்றொரு வீரருடன் மோதி வெற்றி பெற்றால் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லலாம்.
இருவர் தோல்வி
அதேவேளையில் 52 கிலோ எடை பிரிவில் கவுரவ் பிதுரி, 81 கிலோ எடை பிரிவில் தில்பக் சிங் ஆகியோர் தோல்வியடைந்தனர். இதுவரை ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் 56 கிலோ எடை பிரிவில் ஷிவா தபா, 64 கிலோ எடை பிரிவில் மனோஜ் குமார், 75 கிலோ எடை பிரிவில் விகாஷ் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.