Published : 11 Oct 2014 10:45 am

Updated : 11 Oct 2014 10:45 am

 

Published : 11 Oct 2014 10:45 AM
Last Updated : 11 Oct 2014 10:45 AM

பெரும் வணிகத்தின் அகோரப் பசி

மரபான வணிகத்தின் நடைமுறைகளையே முற்றிலும் மாற்றி அமைத்திருக்கின்றன இணைய வணிக நிறுவனங்கள். இணையதள விற்பனை நிறுவனங்களான ஃபிளிப்கார்ட், ஸ்னாப்டீல், அமேசான் போன்றவை போட்டி போட்டுக்கொண்டு அறிவிக்கும் தள்ளுபடி விற்பனையைப் பிற வணிகத் துறையினர் கடுமையாக விமர்சித்துவருவது ஒன்றும் ஆச்சரியமானதல்ல.

மற்ற வர்த்தகர்களுடைய வருத்தம், கோபம் எல்லாம், இவர்களால் எப்படி இவ்வளவு விலை குறைவாக அல்லது லாபம் குறைவாக விற்க முடிகிறது என்பதைப் பற்றியது. மேலும், இந்த வகை வியாபாரம் தழைத்து வளர ஆரம்பித்தால், வாடகைக்கு இடம் பிடித்துக் கடை நடத்தும் நம்முடைய எதிர்காலம் என்னாவது என்பது அவர்களுடைய அச்சம். இணையதள நிறுவனங்கள் தங்களுடைய லாப விகிதத்தை வெகுவாகக் குறைத்து விற்கின்றன என்றால், இதர வியாபாரிகள் கொள்ளை லாபத்துக்கு விற்கிறார்களா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மனதில் எழும். அடுத்த கேள்வி, இணையதள நிறுவனங்கள் தாங்கள் நடத்தும் வியாபாரம் தொடர்பான கணக்குகளை முறையாகப் பராமரிக்கிறார்களா, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளைச் செலுத்துகிறார்களா, ஏமாற்றுகிறார்களா என்பது.


சமீபகாலமாக வர்த்தகத் துறையில் அரசு ஏதாவது கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவுக்கு நிறுவனங்களிடையே விளம்பரப் போட்டியும் இலவசப் போட்டியும் உச்சத்தில் இருக்கின்றன. முறையற்ற வர்த்தகம் மற்றும் ஏகபோக வர்த்தகம் ஆகியவற்றைத் தடை செய்யும் சட்டம் பெயரளவுக்குத்தான் அமலில் இருக்கிறது. எடை, தரம், விலை போன்றவற்றைச் சோதிப்பதும் எப்போதாவதுதான் நடக்கிறது. அதிகார வர்க்கத்தில் மலிந்துள்ள ஊழல், இதுபோன்ற ஏகபோகங்களுக்குத் துணைபோகிறது. எனவே, இணையதள வர்த்தகம் தொடர்பாக வந்துள்ள புகார்களை விசாரிப்போம் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார். பேச்சோடு நின்றுவிடாமல் செயலில் இறங்கியாக வேண்டும்.

ஒவ்வொரு தொழிலுக்கும், ஒவ்வொரு தொழில் முறைக்கும் ஒரு இடம் இருக்கிறது. ஆரோக்கியமான போட்டி, நெறிமுறைகளை ஒட்டிய செயல்பாடுகள் போன்றவற்றைக் கடைப்பிடிக்கும்போது, யாருடைய இடத்துக்கும் ஆபத்து ஏற்படுவதில்லை. ஒரு நிறுவனத்துக்குப் போட்டி நிறுவனம் ஒன்று இருப்பது உண்மையில் ஆக்கபூர்வமானதே. ஆனால், போட்டியே இல்லாமல் செய்துவிடுவது ஏகபோகமல்லவா! தொழிலில் ஏகபோகம் என்பது உடனடி நன்மைகள் சிலவற்றைச் சாத்தியமாக்கினாலும் காலப்போக்கில் பொருளாதாரத்தில் பெரும் ஏற்றத்தாழ்வையையே ஏற்படுத்திவிடும். உலகமயமாதல், தாராளமயமாதல் போன்றவற்றின் பேரில் நமது மரபான தொழில்களையும் தொலைத்துவிட்டோம். இந்த நிலையில், நவீனத் தொழில்களும், தொழில் முறைகளும் குறுகிய காலத்தில் அசுரத்தனமாக மாற்றமடைந்துவருவதால் அதில் நிலவும் போட்டியும் அசுரத்தனமாக ஆகிவிட்டது.

இணையதள வர்த்தக நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்கத் தொடங்கினால், சில்லறை வியாபாரம்கூட நாளடைவில் படுத்துவிடும். இதனால், சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சாமானிய மக்களின் வாழ்வாதாரமே சீர்குலைந்துவிடும் ஆபத்து இருக்கிறது. பெரும் வணிகம் அனைத்தையும் கபளீகரம் செய்வதை வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் அரசு யாருக்கானது என்ற கேள்வியே இறுதியில் எஞ்சுகிறது.


பெரு வணிகம்ஃப்பிளிப்கார்ட்ஸ்னாப்டீல்அமேசான்மரபு வணிகம்

You May Like

More From This Category

More From this Author