டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: அரை இறுதியில் நுழைந்தது கோவை அணி

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர்: அரை இறுதியில் நுழைந்தது கோவை அணி
Updated on
2 min read

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லைகா கோவை கிங்ஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

திருநெல்வேலியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கோவை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சூர்ய பிரகாஷ் 50 பந்துகளில், 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 51 ரன்னும், அனிருதா சீதா ராம் 38, முகமது 27 ரன்களும் சேர்த்தனர். திண்டுக்கல் அணி தரப்பில் சிலம்பரசன், ஆதித்யா அருண் ஆகியோர் தலா இரு விக்கெட்கள் கைப்பற்றினர்.

148 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திண்டுக்கல் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் திண்டுக்கல் அணி மந்தமாக விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது. 9 ஓவர்களில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

13-வது ஓவரில் இருந்து அந்த அணி சீராக ரன் சேர்த்த போதிலும் வெற்றியை நெருங்க முடியாமல் போனது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜெகதீசன் 54 பந்துகளில் 58 ரன் எடுத்தார். இரண்டு வீரர்கள் ரன் எடுக்காத நிலையிலும், 3 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களிலும் நடையை கட்டினர்.

கோவை அணி தரப்பில் விக்னேஷ், ஹரீஷ் குமார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஹரீஷ் குமார் தேர்வானார். கோவை அணிக்கு இது 4-வது வெற்றியாக அமைந்தது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி மொத்தம் 8 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது. திண்டுக்கல் அணி ஏற்கெனவே 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ்-மதுரை சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணி 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கவுசிக் காந்தி 55 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் விளாசினார். வாஷிங்டன் சுந்தர் 34, மாருதி ராகவ் 22 ரன்கள் சேர்த்தனர். மதுரை அணி தரப்பில் ராஜா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி பேட் செய்ய தொடங்கியது.

அரை இறுதியில் கில்லீஸ்

முன்னதாக நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் திருவள்ளூர் வீரன்ஸ் அணியை வீழ்த்தி, 10 புள்ளிகளுடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. முதலில் பேட் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கோபிநாத் 62, சத்யமூர்த்தி சரவணன் 54 ரன்கள் எடுத்தனர். திருவள்ளூர் தரப்பில் லட்சுமி நாராயணன் 2 விக்கெட் கைப்பற்றினார்.

155 ரன்கள் இலக்குடன் பேட் செய்த திருவள்ளூர் அணி 20 ஓவர் களில் 9 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து தோல் வியை சந்தித்தது. அதிகபட்சமாக ரோஹித் 34 ரன்கள் சேர்த்தார். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் முகுந்தன் 5 விக்கெட் வீழ்த்தினார்.

இன்றைய ஆட்டம்

டிஎன்பிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் இன்று காஞ்சி வாரியர்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு திருநெல்வேலியில் நடைபெறு கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in