

பனிச்சறுக்கில் விபத்துக்குள்ளான ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமாக்கரின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடமும், தங்கள் குடும்பத்தினரிடம் தகவல்கள் கேட்டு தொந்தரவு செய்ய வேண்டாம் என்று ஊடகங்களுக்கு ஷுமாக்கரின் மனைவி கொரினா ஷுமாக்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஷூமாக்கரின் மனைவி கொரினா ஷுமாக்கர் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி சேனல்களுக்கு விடுத்த உருக்கமான வேண்டுகோளில், ஷூமாக்கர் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை வாசலில் எப்போதும் கூடி நின்று அவருக்கு சிகிச்சை அளிக்க வரும் டாக்டர்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு தொந்தரவு அளிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.
ஷூமாக்கருக்கு ஏற்பட்டுள்ள விபத்தால் நாங்கள் அனைவருமே பெரும் துன்பத்தில் இருக்கிறோம். எனவே இந்த சூழ்நிலையில் எங்களை சற்று தனிமையில் இருக்க அனுமதிக்க வேண்டும். மருத்துவமனைக்கு வந்த எங்களிடம் தொடர்ந்து கேள்விகளைக் கேட்பது துன்பத்தை மேலும் அதிகரிப்பதாகவே இருக்கிறது. எனவே மருத்துவமனை முன்பு கூடி இருக்கும் ஊடகத்தினர் அனைவரும் அங்கிருந்து சென்று விடுங்கள் என்று கொரினா ஷூமாக்கர் கூறியுள்ளார்.
பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் கடந்த 29-ம் தேதி பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த ஷூமாக்கர் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரு வாரமாக அவரது உடல்நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று அவரது உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அவரது உறவினர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவர் கோமா நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. டாக்டர்கள் அவரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.