Published : 18 Dec 2013 10:10 AM
Last Updated : 18 Dec 2013 10:10 AM

முதல் டெஸ்ட் போட்டி: தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை சமாளிக்குமா இந்தியா?

இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் புதன்கிழமை தொடங்குகிறது.

மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் ஓய்வுக்குப் பிறகு இந்தியாவிளையாடவிருக்கும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஸ்டெயின் கூட்டணியின் வேகப்பந்து வீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தடுமாறிய இந்திய அணிக்கு, இந்த டெஸ்ட் தொடரிலும் கடுமையான சவால் காத்திருக்கிறது.

அன்னிய மண்ணில் ஓரளவு ஆதிக்கம் செலுத்திய இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான சச்சின், ராகுல் திராவிட், கங்குலி, லட்சுமண் ஆகியோர் ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், மூத்த வீரர்களான சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோரும் மோசமான பார்ம் காரணமாக அணியில் இடம்பெறவில்லை.

அதனால் முழுக்க முழுக்க இளம் வீரர்களே இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். இந்திய பேட்ஸ்மேன்களில் தோனி, கோலியைத் தவிர மற்றவர்களுக்கு அன்னிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பெரிய அனுபவம் கிடையாது. இது இந்திய அணியின் மிகப்பெரிய பலவீனமாகக் கருதப்படுகிறது.

சச்சின் இடத்தில் கோலி?

இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய், ஷிகர் தவண் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுப்பதைப் பொறுத்தே இந்தியாவின் ரன் குவிப்பு அமையும். 3-வது இடத்தில் களமிறங்கும் சேதேஷ்வர் புஜாரா சமீபத்திய ரஞ்சி போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன் சேர்த்துள்ளார். சமீபத்தில் ஓய்வு பெற்ற மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் விட்டுச் சென்ற 4-வது இடத்தை நிரப்புவது யார் என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. அநேகமாக விராட் கோலி 4-வது வீரராக களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரைத் தவிர வேறு யாரும் அந்த இடத்துக்கு சரியான நபராக இருக்கமாட்டார்கள்.

சச்சின் இடத்தை நிரப்பும் வகையில் கோலி களமிறக்கப்பட்டால் அவர் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் கோலி தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி ரன் குவித்திருந்தாலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரு ஒருநாள் போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 31 ரன்களே எடுத்தார்.

மிடில் ஆர்டரில் கேப்டன் தோனி, ரோஹித் சர்மா ஆகியோரையே நம்பியுள்ளது இந்தியா. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக இரு சதங்களை விளாசிய ரோஹித் சர்மா, இந்த போட்டியில் ஓரளவு ரன் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 பெளலர்கள்?

இந்தப் போட்டியில் இந்திய அணி 7 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குமா? இல்லை 6 பேட்ஸ்மேன்கள், 5 பௌலர்களுடன் களமிறங்குமா என்பது தெரியவில்லை. இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறி வரும் நிலையில் 6 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்குவது ஆபத்து என்றாலும், அஸ்வின் சிறப்பாக பேட் செய்து வருவதால் தோனி “ரிஸ்க்” (5 பௌலர்களுடன் களமிறங்குவது) எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா 6 பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கினால் ரவீந்திர ஜடேஜா வுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் போகலாம். அதே நேரத்தில் ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, முகமது சமி, உமேஷ் யாதவ் என 4 வேகப்பந்து வீச்சாளர்களுடனும், சுழற்பந்து வீச்சில் அஸ்வினை நம்பியும் இந்தியா களமிறங்க வாய்ப்புள்ளது.

ஜாகீர்கான் 300 விக்கெட்

இதுவரை 88 டெஸ்ட் போட்டி களில் விளையாடியுள்ள மூத்த வீரரான ஜாகீர்கான் 295 விக்கெட்டு களை வீழ்த்தியுள்ளார். அவர் இந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் எடுக்கும்பட்சத்தில் 300 விக்கெட்டுகளை வீழ்த்துவார். உடற் தகுதியை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் சென்று பயிற்சி மேற் கொண்ட ஜாகீர்கான், இப்போது முழு பலத்தோடு திரும்பியிருக்கிறார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு

2011-12-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய அணி, அதன்பிறகு ஏறக்குறைய 2 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் வெளிநாட்டில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. இடைப்பட்ட 2 ஆண்டுகளில் இந்தியாவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 9-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் செய்துள்ளது. நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா, இங்கிலாந்திடம் மட்டும் தொடரை இழந்தது.

வலுவான தென் ஆப்பிரிக்கா

சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் கிரீம் ஸ்மித், ஹசிம் ஆம்லா, ஜாக்ஸ் காலிஸ், டிவில்லியர்ஸ், டுமினி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஸ்டெயின், மோர்ன் மோர்கல், வெர்னான் பிலாண்டர், கிளெய்ன்வெல்ட், காலிஸ் என வலுவான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஜோகன்னஸ்பர்க்கில் இந்திய பேட்ஸ்மேன்களை பந்தாட ஸ்டெயின் கூட்டணி காத்திருக்கிறது.

இந்தியா: எம்.எஸ்.தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிகர் தவண், முரளி விஜய், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, அம்பட்டி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பிரக்யான் ஓஜா, ஜாகீர்கான், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சமி, புவனேஸ்வர் குமார், விருத்திமான் சாஹா.

தென் ஆப்பிரிக்கா: கிரீம் ஸ்மித் (கேப்டன்), ஏ.பி.டிவில்லியர்ஸ் (விக்கெட் கீப்பர்), ஹசிம் ஆம்லா, ஜே.பி.டுமினி, ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ், டியான் எல்கர், இம்ரான் தாஹிர், ஜாக்ஸ் காலிஸ், ரோரி கிளெய்ன்வெல்ட், மோர்ன் மோர்கல், ஆல்விரோ பீட்டர்சன், ராபின் பீட்டர்சன், வெர்னான் பிலாண்டர், டேல் ஸ்டெயின், தாமி சோலேகைல்.

இதுவரை

இவ்விரு அணிகளும் 1992 முதல் 2010-11 வரை மொத்தம் 10 டெஸ்ட் தொடர்களில் மோதியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா 5 முறையும், இந்தியா இரு முறையும் தொடரை வென்றுள்ளன. தங்கள் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4 முறை கைப்பற்றியுள்ள தென் ஆப்பிரிக்கா, 1999-2000-ல் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றிருக்கிறது.

இந்திய அணி இருமுறை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியிருக்கிறது. அந்த இரு தொடர்களுமே இந்தியாவில் நடைபெற்றவையாகும். கடைசியாக 2004-05-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியிருக்கிறது. அதன்பிறகு இதுவரை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றதில்லை.

2007-08, 2009-10, 2010-11 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 3 டெஸ்ட் தொடர்களும் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்துள்ளன. இரு அணிகளும் மொத்தம் 27 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இந்தியா 7 முறையும், தென் ஆப்பிரிக்கா 12 முறையும் வெற்றி கண்டுள்ளன. 8 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் மொத்தம் 15 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் தென் ஆப்பிரிக்கா 7 போட்டிகளிலும், இந்தியா 2 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளன. 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. 2006 டிசம்பரில் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற போட்டியில் திராவிட் தலைமையிலான இந்திய அணியும், 2010 டிசம்பரில் டர்பனில் நடைபெற்ற போட்டியில் தோனி தலைமையிலான இந்திய அணியும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளன.

மைதான கண்ணோட்டம்

ஜோகன்னஸ்பர்க் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு பந்துகள் ஸ்விங் ஆவதோடு, தலைக்கு மேல் எகிறும். அதனால் இங்கு முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் அது நல்ல ஸ்கோராக இருக்கும் என மைதான பராமரிப்பாளர் பேதுல் புத்தேல்ஸி கூறியுள்ளார்.

ஜோகன்னஸ்பர்க் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இதுவரை இந்தியா தோற்றதில்லை. இங்கு 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா ஒரு வெற்றியையும், 2 டிராவையும் பதிவு செய்துள்ளது.

போட்டி நேரம்: மதியம் 2 மணி.

நேரடி ஒளிபரப்பு: டென் ஸ்போர்ட்ஸ்,டென் கிரிக்கெட்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x