Published : 19 Oct 2014 12:34 PM
Last Updated : 19 Oct 2014 02:45 PM
சீனாவில் கட்டப்பட்டு வரும் அதிநவீன ராக்கெட் ஏவுதளம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அந்த நாட்டின் 4-வது ஏவுதளம் ஆகும்.
ஹெய்னன் மாகாணத்தில் ‘வென்சங் செயற்கைக்கோள் ஏவு மையம்’ நிறுவ திட்டமிடப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து இந்த மையம் விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என சீன அரசின் ‘பீப்புள்ஸ் டெய்லி’ செய்தி வெளியிட்டுள்ளது. அடுத்த தலைமுறை ராக்கெட்கள் மற்றும் விண்வெளி ஆய்வு மையத்துக்கு அனுப்பப்படும் வாகனங்களை விண்ணில் செலுத்துவதற்கான அதிநவீன வசதிகளுடன் இந்த மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஹெய்னன் மாகாண தலைநகர் ஹெய்கூ நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் இந்த மையம் அமைந்துள்ளது. சீனாவில் கடற்கரை அருகே அமைந்துள்ள முதல் ராக்கெட் ஏவுதளம் என்ற பெயரையும் இது பெற்றுள்ளது. கோபி பாலைவனத்தில் அமைந்துள்ள ஜியூக்வான் ராக்கெட் ஏவுதளம் இப்போது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர சிச்சுவான் மாகாணத்தின் தையுவான், ஜிசாங் ஆகிய 2 இடங்களிலும் ராக்கெட் ஏவுதளங்கள் உள்ளன.
விண்வெளித்துறையிலும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் வகையில் சீனா முன்னேறி வருகிறது. சீன பட்ஜெட்டில் விண்வெளி ஆய்வுத் துறைக்கு குறிப்பிடத்தக்க வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது