நர்சிங் யாதவ் அறையில் தங்கியிருந்த சந்தீப் துல்சியும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்: திட்டமிட்ட சதி நடந்திருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குற்றச்சாட்டு

நர்சிங் யாதவ் அறையில் தங்கியிருந்த சந்தீப் துல்சியும் ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார்: திட்டமிட்ட சதி நடந்திருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குற்றச்சாட்டு
Updated on
2 min read

நர்சிங் யாதவ் ஊக்கமருந்து விவகாரத்தின் பின்னணியில் சதி இருப்பதாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளையில் நர்சிங் யாதவின் அறையில் தங்கியிருந்த மற்றொரு மல்யுத்த வீரரும் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

ஊக்கமருந்து விவகாரத்தினால் ரியோ ஒலிம்பிக்கின் மல்யுத்த போட்டியில் 74 கிலோ உடல் எடைப்பிரிவின் கீழ் நர்சிங் யாதவ் போட்டியிடுவது சந்தேகமாகி யுள்ளது. இந்நிலையில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ஷரண் சிங் கூறியதாவது:

நர்சிங் மீது எந்தத் தவறும் இல்லை. நாங்கள் அவர் மீது முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். அவ ருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைப்பதை நாங் கள் உறுதி செய்வோம். பிரச்சினை யிலிருந்து அவர் வெளிவந்து ஒலிம் பிக்கில் விளையாடுவதற்கு முழு முயற்சியையும் மேற்கொள்வோம்.

மருத்துவச் சோதனைகளை அவர் மனமுவந்து ஏற்றுக் கொண் டுள்ளார். அவர் அதனை தவிர்க்க விரும்புபவர் கிடையாது. தன்னை சுற்றி சதிவலை பின்னப்பட்டுள்ள தாக அவர் எங்களுக்கு எழுத்து மூலம் புகார் அளித்துள்ளார். அவ ருக்கும் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு குழு, நர்சிங் யாதவிடம் நாளை விசாரணை நடத்த உள்ளது. அவர்கள் இந்த விவகாரத்தின் அனைத்து அம்சங்களையும் பரிசீலித்து 28-ம் தேதி இறுதி முடிவு அறிவிப்பார்கள். எப்படியும் நர்சிங் இதிலிருந்து சுத்தமானவராக வெளிவருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பூஷன் ஷரண் சிங் கூறினார்.

இந்நிலையில் சோனிப்பேட்டில் அமைந்துள்ள இந்திய விளையாட்டு ஆணைய மைய வளாகத்தில் நர்சிங் யாதவின் அறை நண்பராக இருந்த சந்தீப் துல்சி யாதவ் என்ற மல்யுத்த வீரரும் ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளதாக நேற்று தகவல் வெளியானது. இது இந்தியாவுக்கு மேலும் பெரிய அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இருவர் உட்கொண்ட ஊக்க மருந்தும் ஒரே வகையைச் சார்ந்தது என்று மருத்துவப் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் உதவி செயலாளர் வினோத் தோமர் கூறும்போது, "இருவரது ரத்த மாதிரி களிலும் ஒரே வகையான மருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. இதுவே சந்தேகத்தை உண்டாக்குகிறது. சோதனை நடத்தப்பட்ட மாதிரிகளில் அதிக அளவிலான ஸ்டெராய்டு உள்ளது.

இதை நம்பவே மிக கடின மாக உள்ளது. யாரோ இதை திட்ட மிட்டு செய்தது போல் தெரிகிறது. ஏன் இதுபோன்று அதிகளவில் கொடுத்தார்கள் என்று தெரிய வில்லை. இவர்கள் இருவரை தவிர வேறு யாரும் ஊக்க மருந்து சோத னையில் தோல்வியடைய வில்லை. ஏதோ தவறு நடந்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது" என்றார்.

கடந்த 2013-ல் ஹங்கேரி தலை நகர் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் கிரேக்கோ - ரோமன் பிரிவில் 66 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சந்தீப் துல்சி யாதவ், வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு சிக்கல்களுக்கு மத்தி யில் தான் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியிருந்தார். கடந்த 5-ம் தேதி நர்சிங் யாதவிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்புக்கு அனுப்பப்பட்டது.

அதன் முடிவு நேற்றுமுன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் நர்சிங், ஊக்கமருந்து பயன்படுத்தி இருப் பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக தனது ‘பி’ மாதிரி சோதனையும் நடத்தும்படி கோரினார். ‘பி’ மாதிரி என்பது அவரிடம் ஏற்கெனவே எடுக்கப் படும் மாதிரியின் ஒரு பகுதி தனியாக வைக்கப்படுவது ஆகும். சந்தேகம் ஏற்படும் போது இன் னொரு முறை சோதனை செய்வதற் காக இந்த நடைமுறை கடைபிடிக்கப் படுகிறது. அவரின் முன்னிலையில் ‘பி’ மாதிரி திறக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதிலும் அவர் ஊக்கமருந்து எடுத்துக் கொண்டது உறுதியானது.

நார்சிங் யாதவின் உடலில் ‘மெடாடைனோன்’ (Metadienone) என்ற ஊக்கமருந்தின் தாக்கம் இருந்துள்ளது. இது தசையை வலுப்படுத்தவும், திறனை மேம்படுத்தவும் உதவும் மருந்தாகும். ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதன் மூலம் நார்சிங் யாதவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்து விட்டதாகவே கருதப்படுகிறது.

ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளதால் நர்சிங் யாதவ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்கான அங்கீகாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மெடாடைனோன் என்றால் என்ன?

மெடாடைனோன் என்பது ஒரு அனாபாலிக் ஸ்டெராய்டு ஆகும். இது தசையை வலுப்படுத்தவும், திறனை மேம்படுத்தவும் உதவும் மருந்தாகும். மெடாடைனோன் ஊக்க மருந்தை ஜெர்மனிதான் கண்டுபிடித்தது. அது 1960-களில் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது. அது அப்போது கட்டுப்படுத்தப்படும் பொருளாகவே இருந்தது.

மெடாடைனோன் உடலில் உள்ள புரத தொகுப்பை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் தளர்ச்சியான தசைகள் வலுவடையும். புரத வளர்சிதை மாற்றத்தின் மூலம் தசைகளில் உள்ள திசுக்களுக்கு அதிகளவிலான நைட்ரஜனை கொடுக்கும்.

இந்த மருந்தை பயன்படுத்துவதால் பெண்களுக்கு மார்பக நோய்கள் வரக்கூடும். இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மேலும் தலை முடிகள் உதிர்ந்து வழுக்கை விழும். மெடாடைனோன் மருந்துகளில் கடைகளில் காப்ஸ்யூல் வடிவங்களில் எளிதாக கிடைக்கிறது. பாடிபில்டர்ஸ்களிடம் இந்த ஊக்க மருந்து மிகவும் பிரபலம் வாய்ந்ததாக உள்ளது.

இந்த ஊக்க மருந்தை விளையாட்டுகளில் பயன்படுத்த உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு (வாடா) தடை வித்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மெடாடைனோன் மருந்தை மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் வழங்கக்கூடாது என்று சட்டம் உள்ளது. ஆனால் ஆசிய மற்றும் தென் அமெரிக்க கண்டங்களில் அதுபோன்ற நிலைமை இல்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in