Last Updated : 30 May, 2017 02:58 PM

 

Published : 30 May 2017 02:58 PM
Last Updated : 30 May 2017 02:58 PM

இந்திய வேகப்பந்து வீச்சில் தீப்பொறி பறக்கிறது; சாம்பியன்ஸ் டிராபியை வெல்லும்: சங்கக்காரா கணிப்பு

இந்திய வேகப்பந்து வீச்சில் தீப்பொறி பறக்கிறது இதனால் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி தக்கவைக்கும் திறன் கொண்டதாக உள்ளது என்று குமார் சங்கக்காரா கணித்துள்ளார்.

ஐசிசி இணையதளத்தில் பத்தி எழுதியுள்ள சங்கக்காரா கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 4 ஆசிய அணிகள் உள்ளன, இவற்றில் இந்திய அணி சிறப்பாக விளங்குகிறது. 2013-ல் இந்தியா வென்றது, இம்முறையும் வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கே உள்ளது.

இன்னும் சொல்லப்போனால் இந்திய அணி வலுவாகவும் வேகப்பந்து வீச்சில் தீப்பொறியும் பறப்பதால் சமச்சீர் அணியாகவும் திகழ்கிறது. மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் அஸ்வின், ஜடேஜா மிக அபாரமாக வீசக்கூடியவர்கள். ஏமாற்றமான ஐபிஎல் தொடருக்குப் பிறகு நிச்சயம் இந்த வலுவான அணி மூலம் விராட் கோலி தலைமைத்துவத்தில் எழுச்சியுறுவதில் தீவிரம் காட்டுவார்.

இந்திய அணித் தேர்வு சற்றே பழமைவாதக் கொள்கையைக் கடைபிடித்தாலும் வலுவான அணியாகவே இந்திய அணி திகழ்கிறது.

எந்த இரு அணிகள் இறுதியில் மோதும் என்பதைக் கணிப்பது கடினம், ஆனால் அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் மோத வாய்ப்புள்ளது.

ஒரு காலக்கட்டத்தில் இரு அணிகள் இந்த வடிவத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தன. தற்போது கடந்த சில ஆண்டுகளாக பல அணிகள் இந்த வடிவத்தில் வளர்ச்சி கண்டுள்ளன. தற்போது 4-5 அணிகள் பெரிய தொடர்களில் சாம்பியன் ஆகும் நோக்கத்துடன் சமபலத்துடன் திகழ்கின்றன.

இங்கிலாந்து அணி கடந்த 2 ஆண்டுகளாக ஆடிவரும் ஆட்டம் உண்மையில் அதன் ஆற்றல் வெளிப்பாட்டுத் தருணங்களே. பொதுவாக மற்ற அணிகளை ஒப்பிடும் போது அணுகுமுறை, உத்திகளில் இங்கிலாந்து அணி பின் தங்கியே இருக்கும். ஆனால் தற்போது அந்த அணி மிகவும் முன்னேறிய அணியாக உள்ளது.

இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான கிரிக்கெட்டை, உற்சாகமான ஒரு கிரிக்கெட் ஆட்டத்தை ஆடி வருகிறது. சில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் அந்த அணியை இந்த நிலையை நோக்கி செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சங்கக்காரா அந்தப் பத்தியில் எழுதியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x