

விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் 22 பட்டங்கள் வென்ற ஸ்டெபி கிராபின் சாதனையை செரீனா சமன் செய்தார்.
லண்டனில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வீழ்த்தினார் செரீனா. 9-வது முறை விம்பிள்டன் இறுதிப்போட்டியில் விளையாடி உள்ள செரீனா வெல்லும் 7-வது விம்பிள்டன் பட்டம் இதுவாகும்.
இதன் மூலம் விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அதிக பட்டங்கள் வென்ற இங்கிலாந்தின் லம்பர்ட் சாம்பரஸ், ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
தவிர செரீனாவின் 22-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகவும் இது அமைந்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்ற வீராங்கனைகள் பட்டியலில் ஸ்டெபி கிராப்புடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார். சாம்பியன் பட்டம் வென்ற செரீனாவுக்கு ரூ.18 கோடி பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஒபன் இறுதிப் போட்டியில் கெர்பரிடம் தோல்வியடைந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை செரீனா இழந்திருந்தார். இதற்கு நேற்றைய ஆட்டத்தில் செரீனா பழிதீர்த்துக் கொண்டார்.
விம்பிள்டன் டென்னிஸில் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ்.