

இடது தோள்பட்டைக் காயம் காரணமாக கொல்கத்தாவின் அதிரடி தொடக்க வீரரான ஆஸி.யின் கிறிஸ் லின் மீதமுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டிகளிலிருந்து விலகவும் நேரிடலாம் என்று நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளர் ஜாக் காலிஸ் தெரிவித்துள்ளார்.
“கிறிஸ் லின் தோள்பட்டை காயம் குறித்த மருத்துவ அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம். தோள்பட்டை என்பது சிகிச்சை அளிப்பதற்கு கடினமான இடமாகும்.
நிச்சயம் அவருக்கு போதிய ஓய்வு தேவை என்றே கருதுகிறோம். அதனால் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகளிலிருந்தே அவர் விலகும் வாய்ப்புகள் உள்ளது. நிச்சயம் அவருக்கும், எங்களுக்கும், ரசிகர்களுக்கும் அது பெருத்த ஏமாற்றமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் என்ன மாதிரியான சேதத்தை எதிரணி பந்துவீச்சுக்கு எதிராகச் செய்ய முடியும் என்பதை முதல் இரண்டு போட்டிகளில் நாம் பார்த்திருக்கிறோம்” என்றார் ஜாக் காலிஸ்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான அன்றைய ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் பந்தை அடிக்க பந்து பவுண்டரியை நோக்கி சென்ற போது அதனை விரட்டிப் பிடிக்கும் நோக்கத்துடன் கிறிஸ் லின் அடித்த டைவ் அவரது இடது தோளைப் பதம்பார்த்து அவர் உடனடியாக களத்தை விட்டு வெளியேறினார், கொல்கத்தா அந்தப் போட்டியை இழந்தது.
எனவே கிறிஸ் லின் ஆடமுடியாமல் போனால் அது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தும்.