இரானி கோப்பை: வினய் வேகத்தில் சுருண்டது ரெஸ்ட் ஆப் இந்தியா

இரானி கோப்பை: வினய் வேகத்தில் சுருண்டது ரெஸ்ட் ஆப் இந்தியா
Updated on
1 min read

கர்நாடக அணிக்கு எதிரான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆப் இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்கு சுருண்டது.

பெங்களூரில் ஞாயிற்றுக் கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஜிவோன்ஜித் சிங் ரன் ஏதுமின்றியும், அபராஜித், கே.எம்.ஜாதவ் ஆகியோர் தலா 2 ரன்களிலும் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கம்பீர் 22 ரன்களிலும், பின்னர் வந்த மன்தீப் சிங் 5 ரன்களிலும் வெளியேறினர். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது ரெஸ்ட் ஆப் இந்தியா.

6-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக்-அமித் மிஸ்ரா ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. 61 பந்துகளைச் சந்தித்த மிஸ்ரா 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த கேப்டன் ஹர்பஜன் சிங் 25 ரன்களில் ஆட்டமிழக்க, தினேஷ் கார்த்திக் 9 ரன்களில் சதத்தை கோட்டைவிட்டார். அவர் 184 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அணி 65.4 ஓவர்களில் 201 ரன்களுக்கு சுருண்டது.

பெங்களூர் தரப்பில் வினய் குமார் 18.4 ஓவர்களில் 47 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஸ்டூவர்ட் பின்னி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய கர்நாடகம், ஆட்டநேர முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்துள்ளது. ராகுல் 28, கணேஷ் சதீஷ் 7 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in