சுவாரசிய ஐபிஎல் துளிகள்

சுவாரசிய ஐபிஎல் துளிகள்
Updated on
1 min read

வார்னர் 641

அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியலில் ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்தார். அவர் 14 போட்டியில் ஒரு சதம், 4 அரை சதம் என மொத்தம் 641 ரன்கள் குவித்தார். கொல்கத்தாவின் காம்பீர் (498), ஹைதராபாத்தின் ஷிகர் தவண் (479) ரன்கள் சேர்த்து அடுத்த இரு இடங்களை பிடித்தனர்.

புவனேஷ்வர் குமார் 26

அதிக விக்கெட்கள் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ஹைதராபாத்தின் புவனேஷ்வர் குமார் (26) முதலிடம் பிடித்தார். புனே வீரர் உனத்கட் (24), மும்பையின் பும்ரா (20) அடுத்த இரு இடங்களை பிடித்தனர்.

705 சிக்ஸர்கள்

ஐபிஎல் 10-வது சீசனில் மொத்தம் 705 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் மேக்ஸ்வெல், ஹைதராபாத்தின் வார்னர் தலா 26 சிக்ஸர்கள் விளாசி முதலிடத்தில் உள்ளனர். டெல்லி வீரர் ரிஷப் பந்த் (24), மும்பையின் பொலார்டு (22), கொல்கத்தாவின் ராபின் உத்தப்பா (21) அடுத்த 3 இடங்களை பிடித்தனர்.

18,775 ரன்கள்

இந்த சீசனில் மொத்தம் 59 ஆட்டங்களில் 18,775 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதில் 10,662 ரன்களானது 705 சிக்ஸர்கள், 1609 பவுண்டரிகள் வாயிலாக கிடைத்தன. 5 சதம், 95 அரை சதம் பதிவாகின. அதிகபட்சமாக பஞ்சாப் வீரர் ஹசிம் ஆம்லா 2 சதங்கள் அடித்தார். புனே வீரர் பென் ஸ்டோக்ஸ், ஹைதராபாத்தின் டேவிட் வார்னர், டெல்லி வீரர் சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒரு சதம் அடித்தனர். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக வார்னர் 126 ரன்கள் விளாசினார்.

708 விக்கெட்கள்

இந்த சீசனில் 2,211 ஓவர்கள் வீசப்பட்டதில் 708 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டது. 3 ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தப்பட்டது. சராசரியாக ஓவருக்கு 8.3 ரன்கள் விகிதம் எடுக்கப்பட்டுள்ளது.

129

இறுதிப் போட்டியில் மும்பை அணி எடுத்த 129 ரன்கள் ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் எடுக்கப்பட்ட 2-வது குறைந்தபட்ச ஸ்கோராகும். இந்த வகையில் 2013-ல் மும்பை அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேர்த்த 125 ரன்கள் முதலிடத்தில் உள்ளது.

இளம் வீரர்

இறுதிப் போட்டியில் விளையாடியதன் மூலம் குறைந்த வயதில் இறுதிப் போட்டியை சந்தித்த இளம் வீரர்(17 வயது 228 நாள்) என்ற சாதனையை புனே வீரர் வாஷிங்டன் சுந்தர் படைத்தார். இதற்கு முன்னர் ராஜஸ்தான் அணிக்காக ஜடேஜா (19 வயது, 178 நாள்) கடந்த 2008-ல் சென்னை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடியதே சாதனையாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in