மீண்டும் பட்டம் வெல்ல முடியுமா என எனக்குள் சந்தேகம் இருந்தது: ‘களிமண் தரை ராஜா நடால் கருத்து

மீண்டும் பட்டம் வெல்ல முடியுமா என எனக்குள் சந்தேகம் இருந்தது: ‘களிமண் தரை ராஜா நடால் கருத்து
Updated on
2 min read

பாரிஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடால், 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்காவை எதிர்த்து விளையாடினார். இதில் நடால் 6-2, 6-3, 6-1 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று 10-வது முறையாக பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்று சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக இது அவருக்கு 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்தது.

பிரெஞ்சு ஓபனில் 3-வது முறை யாக ஒரு செட்டைக்கூட இழக் காமல் மகுடம் சூடியிருக்கிறார் நடால். பிரெஞ்சு ஓபனில் மட்டும் அவர் இதுவரை 81 ஆட்டங்களில் பங்கேற்று 79 வெற்றிகளை வசப் படுத்தி உள்ளார். இந்த வெற்றியின் மூலம் 3 வருடங்களுக்கு பிறகு உலக டென்னிஸ் தரவரிசையில் நடால் 2-வது இடத்துக்கு, முன்னேறி உள்ளார்.

களிமண் தரையில் நடால் வென்றுள்ள 53-வது பட்டம் இது. அதேநேரத்தில் இந்த சீசனில் களிமண் தரையில் 25 ஆட்டங்களில் விளையாடி 24-ல் வெற்றியை கைப்பற்றி உள்ளார்.

பிரெஞ்சு ஓபனில் 2005 முதல் 2008 வரையில் தொடர்ச்சியாக 4 முறையும், 2010 முதல் 2014 வரையில் தொடர்ச்சியாக 5 முறையும் பட்டங்களை வென்ற நிலையில் தற்போது 10-வது பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறார் களிமண் தரை ஆடுகள ராஜாவான ரபேல் நடால்.

இந்த பட்டம் அவருக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. காயம், மோசமான பார்ம் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக எந்த ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்ற முடியாமல் தவித்த நடால், அதன் பின்னர் தனது பயிற்சியாளர், களவியூகங்களை மாற்றி அமைத்து கடினமான உழைத்ததால் மீண்டும் ஒரு முறை மகுடம் சூடி உள்ளார்.

வெற்றி குறித்து 31 வயதான நடால் கூறும்போது, “எனது திறன் மீது எனக்கு ஒவ்வொரு நாளும் சந்தேகம் இருக்கிறது. அது மிக தீவிரத்துடன் கடினமாக உழைக்க எனக்கு உதவுகிறது. நமது திறனை மேம்படுத்திக் கொள்ள உழைக்க வேண்டும் என்பதை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். எனது திறனில் இன்றும் எனக்கு சந்தேகம் நிலவுகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே சந்தேகித்தேன். ஒருசில நாட்களில் மீண்டும் சந்தேகம் ஏற்படக்கூடும்.

வாழ்க்கை தெளிவாக இல்லை. உங்களுக்கு சந்தேகம் எழவில்லை என்றால் நீங்கள் மிகுந்த திமிர்பிடித்தவர் என்றே அர்த்தம். ஆனால் நான் திமிர் பிடித்தவன் இல்லை. 10-வது முறையாக பிரெஞ்சு ஓபன் பட்டம் வென்றது மாயமாகவே உள்ளது.

கடந்த ஆண்டு எனக்கு கடின மாக அமைந்த நிலையில் பெரிய அளவிலான வெற்றியை மீண்டும் பெற்றது சிறப்பான விஷயம். 3-வது செட்டில் 4-1 என முன்னிலை வகித்த போது பட்டத்தை நெருங்கி விட்டதாக உணர்ந்தேன். 5-1 என முன்னிலை வகித்த போது வெற்றி பெற்றதாக உணர்ந்தேன்.

இந்த ஆண்டு மற்றும் கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டிகளில் கடைசி வரை நெருங்கி வந்து பட்டம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டேன். அதனால் இம்முறை வாவ்ரிங்காவுக்கு வாய்ப்பு கொடுத்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். தொடர்ச் சியாக வெற்றி பெற்றால் டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. நான் நன்றாக விளையாடினால் ஏன் முதலிடத்தை பிடிக்க முடியாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in