மே.இ.தீவுகளை 2-வது இன்னிங்ஸிலும் ஆல் அவுட் செய்து வெற்றி பெற முடியும்: புவனேஷ் குமார் உறுதி

மே.இ.தீவுகளை 2-வது இன்னிங்ஸிலும் ஆல் அவுட் செய்து வெற்றி பெற முடியும்: புவனேஷ் குமார் உறுதி
Updated on
1 min read

இந்திய-மேற்கிந்திய 3-வது டெஸ்ட் போட்டியில் 5-ம் நாளில் 98 ஓவர்கள் இருக்கும் நிலையில் மே.இ.தீவுகளை மீண்டும் ஆல் அவுட் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் 5 விக்கெட் நாயகன் புவனேஷ்வர் குமார்.

நேற்று அவர் 10.4 ஓவர்களை தொடர்ந்து வீசினார். இதில் 14 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றினார் மேற்கிந்திய அணி கடைசி 6 விக்கெட்டுகளை 23 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணி வேகமாக ரன் அடித்து 4-ம் நாள் முடிவில் 285 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், தனது பந்து வீச்சு, வெற்றி வாய்ப்பு குறித்து புவனேஷ் குமார் கூறியதாவது:

பந்துகள் ஸ்விங் ஆனது எனக்கு பெரிய உற்சாகத்தைக் கொடுத்தது. ஸ்விங் ஆனால் நான் விக்கெட்டுகளை வீழ்த்தும் சாத்தியம் அதிகம். உணவு இடைவேளைக்குப் பிறகு நான் என்ன செய்தேனோ அதனை சிறப்பாகச் செய்து காட்ட முடிந்தது. இந்த 7-8 ஓவர்களில் விக்கெட்டுகளை பெற்றேயாக வேண்டும், வீழ்த்துவேன் என்ற எண்ணத்தில் தான் வீசினேன், ஆனால் 2-3 விக்கெட்டுகள் என்றுதான் திட்டமிட்டேன், 5 விக்கெடுகளை வீழ்த்துவேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. உத்வேகம் கிடைத்ததால் இது விளைந்தது.

ஏற்கெனவே நாங்கள் பேசினோம், அதாவது தேநீர் இடைவேளைக்குள் அவர்களை ஆட்டமிழக்கச் செய்தால் இந்த டெஸ்டில் இருமுறை அவர்களை ஆட்டமிழக்கச் செய்ய போதிய அவகாசம் கிடைக்கும் என்று. எனவே திட்டங்களை விவாதித்துள்ளோம், அதனை இன்று செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

எனவே போட்டியை வெற்றிக்கு இட்டுச் செல்வது என்பதில் அணியின் அனைவருக்குமே ஒருமித்த கருத்துதான் நிலவுகிறது.

நான் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் ஆடுகிறேன். பெங்களூருவில் நடைபெற்ற முகாமில்தான் இந்தத் தொடருக்காக குறிப்பாக பயிற்சி மேற்கொண்டேன். நீண்ட நாட்கள் கழித்து டெஸ்ட் போட்டியில் ஆடியதால் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் முதல் பந்தை வீசியதும் அனைத்தும் சகஜமாகி விட்டது.

இன்று அவர்களை ஆல் அவுட் செய்ய போதிய அவகாசம் இருக்குமாறு டிக்ளேர் செய்யப்படும்.

என்று கூறி விடைபெற்றார் புவனேஷ் குமார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in