Published : 11 Jul 2016 10:27 AM
Last Updated : 11 Jul 2016 10:27 AM

பதிலி வீரர் எடெர் கோல் தந்த கொண்டாட்டம்: போராடிய பிரான்ஸ் அணியை வீழ்த்தி போர்ச்சுக்கல் யூரோ சாம்பியன்

நட்சத்திர வீரர், கேப்டன் ரொனால்டோ ஆட்டத்தின் அரைமணி நேரத்துக்குள்ளாகவே காயத்தின் காரணமாக ஸ்ட்ரெச்சரில் கண்ணீருடன் வெளியேறினார். ஆனால், அவரது கண்ணீர்... ஆனந்தக் கண்ணீராகப்போவதை அவர் அப்போது உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.

109-வது நிமிடத்தில் பதிலி வீரர் எடெர் அடித்த எதிர்பாராத கோலே வெற்றிகோலாக மாற, பிரான்ஸை போர்ச்சுக்கல் வீழ்த்தி ஐரோப்பிய சாம்பியன் ஆனது.

30 நாட்கள் 50 போட்டிகள் 107 கோல்கள் என்ற நிலையில் யூரோ இறுதிப் போட்டி ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துடன் தொடங்கியது.

அன்று ஜெர்மனிக்கு என்ன நடந்ததோ இன்று பிரான்ஸுக்கு நடந்தது. பந்தை அதிகம் தங்கள் வசம் வைத்திருந்ததும் பிரான்ஸ், கோல் நோக்கி அதிக ஷாட்களை அடித்ததும் பிரான்ஸ், பாஸ்களிலும் சிறந்து விளங்கியது பிரான்ஸ், ஆனாலும் ரொனால்டோ இல்லாத போர்ச்சுக்கல் சாம்பியன்!

இதற்காக எடெர் அடித்த அந்த அபாரமான கோலின் தரத்தை குறைத்து எடை போட முடியாது. அன்று ஜெர்மனி ஆட்டத்தையும் கடந்து சென்று ஆடியது. ஆனாலும் தோல்வி. பிரான்ஸ் அன்று ஜெர்மனி ஆடிய அளவுக்கு ஆடவில்லை என்றாலும், போர்ச்சுக்கலை விட நன்றாகவே ஆடியது. ஆனாலும் தோல்வி! இதுதான் கால்பந்தாட்டத்துக்கே உரிய தனித்தன்மை என்று கூறுகிறோம்.

ஆனாலும் பார்த்ததை எழுதும்போது கூட 'சாக்கர்' என்று எழுதி ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடும் அன்பர்கள் 'நியூட்ரல் ப்ளீஸ் ப்ரோ' என்று ஆலோசனை வழங்குகின்றனர். ஆட்டத்தை வர்ணிக்கும்போது நியூட்ரலாக எழுதுவது 'நியூட்ரல் ஆகாது ப்ரோ' என்று மட்டும் கூறிக்கொண்டு மேலே செல்வோம்.

வலியில் துடித்த ரொனால்டோ

ரொனால்டோ 25 நிமிடங்கள் கூட ஆட முடியவில்லை. பிரான்ஸ் அவரை 'கவனித்துக் கொள்கிறோம்' என்று கூறியிருந்தனர், கூறியபடியே 'கவனித்தனர்'. ஆனால் காயமடைந்தும் சிகிச்சை பெற்று விளையாட முயற்சி செய்தார். ஆனால் சிறிது நேரத்திற்கெல்லாம் அவரால் தொடர முடியாமல் போனது, கண்ணீருடன் வெளியேறினார்.

ஆட்டம் தொடங்கி சில நிமிடங்களில் முதல் வாய்ப்பு போர்ச்சுக்கலுக்கே கிடைத்தது. 5-வது நிமிடத்தில் செட்ரிக் அடித்த லாங் பாஸை நானி விறுவிறுவென எடுத்துச் சென்று ஓரளவுக்கு அருகிலிருந்து ஷாட்டை அடிக்க பந்து கோல் பாருக்கு மேலே சென்றது.

மறுமுனையில் பிரான்ஸ் ஒரு முயற்சியை மேற்கொண்டது. அந்த அணியின் மவுசா சிசோகோ அடித்த ஷாட்டும் கோல் போஸ்டுக்கு மேலே சென்றது. முன்னதாக ஆண்டாய்ன் கிரீஸ்மேன் மேற்கொண்ட முயற்சியும் கோலுக்கு நன்றாக வெளியே சென்றது.

ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கடும் போராட்டம் ஒன்றில் ரொனால்டோவும், டிமிட்ரி பயேட்டும் மோதிக்கொண்டனர். முழங்கால்கள் மோதிக்கொள்ள ரொனால்டோ வலியால் துடித்தார். சிகிச்சைக்குப் பிறகு தொடர்ந்தார்.

இதற்கு அடுத்த நிமிடத்தில் பெபே பந்தை நழுவ விட இடது புறத்தில் பயேட் பந்தை பெற்றார். அவர் போர்ச்சுக்கல் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து ஒரு அருமையான ஷாட்டை அடிக்க, அங்கு கிரீஸ்மேன் அருகிலிருந்து தலையால் முட்டினார். பந்து கோலா என்று அனைவரும் ஆவலாகப் பார்க்க, பந்து கிராச் பாருக்கு சற்று கீழே கோலுக்குள் செல்லும்போது போர்ச்சுகல் கோல் கீப்பர் ருய் பேட்ரிசியோ எம்பி தள்ளிவிட்டார், மிக அருமையான 'சேவ்' அது. இதனால் விளைந்த கார்னர் ஷாட்டை ஜிரோட் தலையால் முட்ட அதனை சுலபமாகப் பிடித்தார் பேட்ரீசியோ.

17-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் வலியால் துடிக்க, சிகிச்சை அளிக்கப்பட்டு 3 நிமிடங்களில் மீண்டும் மைதானம் திரும்பினார். இதன் பிறகு பிரான்ஸ் வீரர் சிஸோகோ செய்த கோல் முயற்சி வீணானது, அட்ரியன் சில்வா அடித்த மற்றொரு ஷாட்டும் வலது புறம் கோலை தவற விட்டது.

இந்நிலையில்தான் 25-வது நிமிடத்தில் ரொனால்டோ மீண்டும் மைதானத்தில் வலியினால் விழுந்தார். இம்முறை அவரால் மீள முடியவில்லை, மீண்டும் கண்ணீர், ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்லப்பட்டார். இவருக்குப் பதில் ரிக்கார்டோ குரேஸ்மா களமிறங்கினார். ரொனால்டோவைக் கொண்டு செல்லும் போது ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி மரியாதை செலுத்தினர்.

ஓர் அரிதான தாக்குதல்...

ரொனால்டோ போனவுடன் பிரான்ஸின் ஆட்டத்திலும் சற்றே தொய்வு ஏற்பட்டது. போர்ச்சுகல் ஆட்டத்திலும் தொய்வு ஏற்பட்டது, ஆனால் பிரான்ஸ் வீரர் சிஸாகோ மீண்டும் ஒருமுறை கோல் கீப்பர் பேட்ரீசியோவை சோதித்தார். அடித்த ஷாட்டை பேட்ரீசியோவும் சம திறமையுடன் முறியடித்தார்.

37-வது நிமிடத்தில் போர்ச்சுக்கல் ஓர் அரிதான தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் கடைசியில் ரஃபேல் குரைரோ அடித்த ஷாட் வைடாகச் சென்றது. மற்றொரு கார்னர் ஷாட்டை ஃபாண்ட் தலையால் அடித்தது கோலுக்கு மேலே சென்றது. முதல் பாதி இதன் பிறகு பெரிய அளவில் சம்பவங்கள் இல்லாமல் சென்றது.

இரண்டாவது பாதியில் 8-வது நிமிடத்தில் போக்பா தூரத்திலிருந்து ஓர் அடி அடித்துப் பார்த்தார். பந்து மேலே சென்றது. பிறகு செட்ரிக், கிரீஸ்மேன் இடையே கடும் போட்டியில் கிரீஸ்மேன் அடித்த ஷாட்டில் வலுவில்லை. பேட்ரீசியோ சுலபமாக பிடித்தார். பிரான்ஸ் பயிற்சியாளர் பயெட்டை வெளியே அழைத்து கொண்டு கிங்ஸ்லி கோமனை களமிறக்கினார்.

ஆட்டத்தின் 66-வது நிமிடத்தில் பிரான்ஸுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியது. இடது புறத்திலிருந்து கோமான் ஒரு கிராஸ் செய்ய அங்கு 6 அடி தூரத்தில் கோல் அருகே மார்க் செய்யப்படாமல் இருந்தா கிரீஸ்மேன் ஆனால் பந்தை தலையால் முட்டும்போது வெளியே சென்றது. இது உண்மையான ஒரு கோல் வாய்ப்பு. 90 நிமிட ஆட்டம் முடிய 12 நிமிடங்களே இருந்த போது மாற்றங்கள் செய்யப்பட்டன, ஆட்டம் சரியாக அமையாத ஜிரோட் திருப்பி அழைக்கப்பட்டு கிக்நாக் களமிறக்கப்பட்டார்.

போர்ச்சுக்கலுக்கு இதனையடுத்து ஒரு கோல் வாய்ப்பு கிட்டியது. நானியின் கிராஸ் வலது புறத்திலிருந்து கோல் நோக்கிச் சென்றது. ஆனால் பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸ் அதனை தட்டி விட்டார். ஆனால் பந்தை குரேஸ்மா மீண்டும் அடிக்க லோரிஸ் கைக்குச் சென்றது. பிறகு 25 அடியிலிருந்து நானி செய்த முயற்சியும் வீணானது. உடனேயே பிரான்ஸின் இன்றைய சிறந்த ஆட்டக்காரர் சிசோகோ நடுக்களத்திலிருந்து அருமையாக பந்தை வேகமாக எடுத்துச் சென்று பிரமாதமான ஷாட் ஒன்றை கோல் நோக்கி அடிக்க அங்கு பேட்ரீசியோ வலது புறம் பாய்ந்து தள்ளிவிட்டார்.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் பிரான்ஸ் வீரர் கிக்னாக் கோல் அடித்திருப்பார். பெபேவுக்கு போக்குக் காட்டி 6 அடியிலிருந்து அடித்த ஷாட் உண்மையில் கோல் சென்றிருக்க வேண்டியதுதான், ஆனால் போர்ச்சுகலின் அதிர்ஷ்டம் அது போஸ்டில் பட்டது. ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது.

உற்சாகப்படுத்திய ரொனால்டோ

கூடுதல் நேரத்தில் முதல் ஷாட் ரொனால்டோ பதிலி வீரர் குரேஸ்மவின் முயற்சியாக இருந்தது. வலது புறத்திலிருந்து ஒரு அருமையான ஷாட்டை ஆட பந்து பிரான்ஸ் கோல் அருகே 6 அடி தூரத்திலிருந்த எடெர் நோக்கி வர அவர் எழும்பி தலையால் முட்டியது லோரிஸைத் தாண்டவில்லை.

கூடுதல் நேர ஆட்டத்தின் போது ரொனால்டோ விங்கிலிருந்து வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தா, அவ்வப்போது 'கட்டிப்பிடி' வைத்தியமும் மேற்கொண்டார்.

போர்ச்சுக்கல் அணிக்கு பிரான்ஸ் தடுப்பாட்ட வீரர்களைக் கடந்து சென்று கோல் அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாதது போல் தெரிந்தது, பிரான்சும் மெல்ல மங்கிக் கொண்டிருந்த்து.

ஓர் அரிய கோல்... சாம்பியன்!

இந்நிலையில்தான் பதிலி வீரர் எடெர் ஓர் அரிய கோலை அடிக்க, அது வெற்றி கோலாக மாறியது. ஆட்டத்தின் 109-வது நிமிடத்தில் இடது புறத்தில் எடெரிடம் பந்து வந்தது, இவரை லாரன்ஸ் கோசியெல்னி மார்க் செய்திருந்தார். ஆனால் அந்தத் தடையைக் கடந்து இன்ஃபீல்டிற்குள் நுழைந்த எடெர் 25 அடியிலிருந்து மிக அருமையான, சக்தி வாய்ந்த ஓர் உதை உதைக்க பந்து பிரான்ஸ் கோல் கீப்பர் லோரிஸுக்கு வலது புறம் கோலாக மாறியது.

ஸ்வன்சீ சிட்டி அணிக்காக கடந்த சீசனில் 15 ஆட்டங்கள் ஆடிய எடெர் ஒரு கோலை கூட அடிக்க முடியாத நிலையில் இன்று போர்ச்சுகலின் ஹீரோவானார். ஆனால் எடெர் பதிலி வீரராகக் களமிறங்கியது முதல் உற்சாகமாகவே ஆடினார், சில பல அச்சுறுத்தல் நகர்வுகளையும் அவர் மேற்கொண்டார். ஆனால் அவர் கோல் அடிக்கும் கணமும் எதிர்பாராத ஒன்று, அவர் கோல் அடிப்பார் என்பதும் எதிர்பாராத ஒன்று. பிரான்ஸ் வீரர் சிசோகோ ஆடிய ஆட்டத்திற்கு பிரான்ஸ் வெற்றி பெற்றிருக்க வேண்டும். நன்றாக ஆடும் அணி வெற்றி பெறும் என்பது கால்பந்தை பொறுத்தவரை எப்போதும் உண்மையாகி விடாது.

உற்சாகக் கடல்

லாங் விசில் ஊதப்பட்டவுடன் கேப்டன் ரொனால்டோ உற்சாகக் கடலில் மிதந்தார். ஒவ்வொரு வீரரையும் கட்டிப்பிடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார். போர்ச்சுகல் கால்பந்தில் ஒரு பொன்னான கணமாகும் இது.

பிரான்ஸுக்கு எதிராக 10 போட்டிகள் தோல்வியடைந்ததை போர்ச்சுகல் தற்போது முடிவுக்குக் கொண்டுவந்தது.

2004-ம் ஆண்டு யூரோ கோப்பையை நடத்திய போர்ச்சுகல் அணி கிரீஸிடம் 0-1 என்று தோல்வி தழுவியது, அதே வலியை இன்று பிரான்ஸுக்கு அளித்தது போர்ச்சுகல். அப்போது கிரீஸ் வென்ற ஆட்டத்தில் 19 வயது ரொனால்டோ மைதானத்தில் கண்ணீர் சிந்தினார். இன்று ஸ்ட்ரெச்சரில் எடுத்து செல்லும் போது அழுது கொண்டேதான் சென்றார் ரொனால்டோ, ஆனால் கூடுதல் நேரத்தில் வீரர்களுக்கு கட்டிப்பிடி வைத்தியத்துடன், சில டிப்ஸ்களையும் அளித்து கடைசியில் முக்கியமான தொடர் ஒன்றில் முதல் முறையாக வெற்றி பெறும் ஆனந்தக் கண்ணீருடன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x