Published : 15 Feb 2015 10:30 AM
Last Updated : 15 Feb 2015 10:30 AM

உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் பதிவுகள்

உலகக் கோப்பை: பாகிஸ்தானை அபாரமாக வீழ்த்தியது இந்தியா

உலகக் கோப்பை 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வீழ்த்தியது.

இதன்மூலம், 'ஃபார்மில் இல்லை' என்ற அதிருப்தியில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு தோனி தலைமையிலான அணி மகிழ்ச்சியுடன் கூடிய ஆறுதலைத் தந்துள்ளது.

இப்போட்டியில் 301 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 224 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது . | ஆர்.முத்துக்குமாரின் அலசல்:>பாகிஸ்தானை வீழ்த்திய தோனியின் கள வியூகமும் இந்தியாவின் முப்பெரும் எழுச்சியும்! |

பாகிஸ்தானின் தோல்வியைத் தவிர்க்கப் போராடிய அந்த அணியின் மிஸ்பா உல் ஹக் 84 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து, தனது அணிக்கு மரியாதையான தோல்விக்குக் காரணமானார்.

பாகிஸ்தான் இன்னிங்ஸ்

3.2-வது ஓவரில் முகமது ஷமியின் அபாரப் பந்துவீச்சில், தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், யூனிஸ் கான். அவர் 10 பந்துகளில் 6 ரன்களே சேர்த்திருந்தார்.

அதேவேளையில், அகமது ஷெகாவத் உடன் ஹாரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்ததும் பாகிஸ்தான் அணியின் ரன் எண்ணிக்கை ஓரளவு உயர்ந்தது.

ஹாரிஸ் சோஹைல் 48 பந்துகளில் 36 ரன்கள் எடுத்த நிலையில், அஸ்வினின் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து, அகமது ஷெஹாவத் 73 பந்துகளில் 47 ரன்கள் எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சோயிப் மக்ஸூத் ரன் ஏதும் எடுக்காமல், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

24.4-வது ஓவர் பந்தில் உமர் அக்மல் பேட்டை உரசியவாறு சென்ற கேட்சைப் பிடித்தார் தோனி. ஆனால், நடுவர் அவுட் தரவில்லை. இதையடுத்து, தோனி மறுபரிசீலனை கோரினார். அதையடுத்து, முன்றாவது நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டது. ஜடேஜா பந்துவீச்சில் உமகர் அக்மல் ரன் எடுக்காமலேயே பெவிலியன் திரும்பினார்.

மிரட்டி சரிந்த பாகிஸ்தான்

அதைத் தொடர்ந்து, மிஸ்பா உல் ஹக்-கும் அப்ரிதியும் சற்றே அதிரடியாக பேட் செய்து, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை மிரட்டத் தொடங்கினர்.

எனினும், 34.1-வது ஓவரில் முகமது ஷமியின் பந்துவீச்சில் கோலியிடம் அப்ரிதி கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்ததும், இந்தியா மீண்டும் ஏற்றம் கண்டது. அப்ரிதி 22 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய வஹாப் ரியாஸ் 4 ரன்களில் முகமது ஷமியின் பந்துவீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

42.5-வது ஓவரில் மோஹித் சர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து யாசிர் ஷா ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்திருந்தார்.

எதிர்முனையில் சகவீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, பொறுப்புடன் பேட் செய்த மிஸ்பா உல் ஹக், 84 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த நிலையில், முகமது ஷமி பந்துவீச்சில் ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக, மோஹித் ஷர்மா பந்துவீச்சில் உமேஷ் யாதவிடம் கேட்ச் கொடுத்து சோஹாலி கான் ஆட்டமிழந்தார். அவர் 7 ரன்கள் எடுத்திருந்தார். இர்ஃபா ஆட்டமிழக்காமல் ஒரு ரன் எடுத்தார்.

ஆட்ட நாயகன் கோலி

இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பேட்டிங்கில் மட்டுமின்றி, பவுலிங்கிலும் திறமையான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தியது.

இந்தப் போட்டியில் சதமடித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி, ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோலி, தவண், ரெய்னா அபாரம்: பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் இலக்கு

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு 301 ரன்கள் என்ற சற்றே சவலான வெற்றி இலக்கை இந்திய இணி நிர்ணயித்தது.

ஷிகார் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் அபாரமான பேட்டிங் பங்களிப்பால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. நிதானமான துவக்கத்தைத் தந்தாலும், பின்னர் இந்திய அணி வீரர்கள் விளாசத் தொடங்கினர். ஆனால், கடைசி ஓவர்களில் சொதப்பலான ஆட்டத்தால் ரன் குவிப்பு வேகம் தடைபட்டது.

அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 20 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், சோஹாலி கான் பந்துவீச்சில் மிப்ஸாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷிகார் தவண் 73

பின்னர், பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக பேட் செய்து வந்த ஷிகார் தவண் 76 பந்துகளில் 73 ரன்கள் குவித்த நிலையில், மிஸ்பா உல் ஹக்கின் சாதுரிய செயல்பாட்டால் ரன் அவுட் ஆனார். தவணின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு உறுதுணையாக அமைந்தது.

கோலி சதம்

தவணுடன் இணைந்து பொறுப்புடனும் சற்று அதிரடியாக பேட் செய்த துணைக் கேப்டன் விராட் கோலி, 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இவரது சதமும் அணிக்கு மிகுந்த பலம் சேர்த்தது. இவரது விக்கெட்டையும் சோஹாலி கான் பறித்தார்.

ரெய்னா அதிரடி

தவண் ஆட்டமிழந்த பிறகு, கோலியுடன் இணைந்த சுரேஷ் ரெய்னா ஆரம்பம் முதலே அதிரடியாக பேட் செய்தார். அவர் 54 பந்துகளில் 74 ரன்கள் குவித்த நிலையில், சோஹாலி கான் பந்துவீச்சில் ஹாரிஸ் சோஹாலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட் சரிவு...

ரெய்னாவுக்குப் பின் தோனி 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 3 ரன்களில் வெளியேறினார். ரஹானே ரன் ஏதும் எடுக்கவில்லை. அஸ்வின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னும், ஷமி ஆட்டமிழக்காமல் 3 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் தரப்பில் சோஹாலி கான் மிகச் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். வஹாப் ரியாஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

அதிர்ஷ்டம் கோலி, ரெய்னாவின் பக்கம்!

அடிலெய்டில் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஃபீல்டர்கள் செய்த தவறினால் கோலி, ரெய்னாவின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடித்தது. | அதன் விவரம் - >கோலி, ரெய்னாவின் பக்கம் அதிர்ஷ்டம் |

| இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போக்கு குறித்த உங்கள் பார்வையில் கருத்துப் பகுதியில் பதியலாம். |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x