

பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 9-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், 3-ம் நிலை வீரரான சக நாட்டைச் சேர்ந்த வாவ்ரிங்காவை எதிர்த்து விளையாடினார்.
இதில் பெடரர் 6-4, 7-5 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். பிஎன்பி பரிபாஸ் தொடரில் அவர் பட்டம் வெல்வது இது 5-வது முறையாகும். இதன்மூலம் இந்த தொடரில் அதிக முறை (5) பட்டம் வென்றிருந்த செர்பியாவின் ஜோகோவிச் சாதனையையும் பெடரர் சமன் செய்தார்.
மேலும் அதிக வயதில் எலைட் மாஸ்டர்ஸ் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத் துள்ளார் பெடரர். பெடரருக்கு தற்போது 35 வயதாகிறது. இதற்கு முன்னர் அமெரிக்காவின் ஆந்த்ரே அகாசி தனது 34 வயதில் பட்டம் வென்றதே சாதனையாக இருந்தது. அவர் கடந்த 2004-ம் ஆண்டு சின்சினாட்டி போட்டியில் பட்டம் வென்றிருந்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 14-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் எலினா வெஸ்னினா 7-5, 6-4 என்ற நேர் செட்டில் சக நாட்டைச் சேர்ந்த 8-ம் நிலை வீராங்கனையான சுவெட்லனா குஸ்நட்சோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.