

தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டியில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆட்டத்தில் வி.பி.திருவள்ளூர் வீரன்ஸ் அணி காரைக்குடி காளையர்கள் அணியை வீழ்த்தியது.
இதில் திருவள்ளூர் வீரன்ஸ் அணி கேப்டன் பாபா அபராஜித் 12 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 63 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்து திருவள்ளூர் ‘வீரன்’ ஆனார். 56 பந்துகளில் சதம் கண்டார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் முதல் சதம் அடித்த சாதனையையும் பாபா அபராஜித் நிகழ்த்தினார்.
166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் துரத்த ஆரம்பித்த திருவள்ளூர் அணி 2-வது பந்திலேயே சி.கணபதியிடம், ஹரி பிரசாந்த் என்பவரை இழந்தது. ஆனால் பாபா அபராஜித் தொடக்கத்தில் சி.கணபதி பந்தில் அளித்த கேட்ச் வாய்ப்பை பத்ரிநாத் தவற விட்டார்.
அபராஜித் அதன் பிறகு புகுந்து விளையாடினார். கே.ஆகாஷ் வீசிய முதல் ஓவரில் 19 ரன்களை விளாசினார் அபராஜித். அபராஜித்துக்கு இன்னொரு வாழ்வும் கிடைத்தது, காரைக்குடி அணியின் எஸ்.அனிருதா இன்னொரு கேட்சை விட்டார்.
சதுர்வேத் என்ற வீரரும், விக்னேஷ் என்ற வீரரும் அவுட் ஆக திருவள்ளூர் 53/3 என்று ஆனது. ஆனால் அபராஜித், சுஜய் என்பவரின் ஓவரில் 2 சிக்சர்கள் 2 பவுண்டரிகள் அடித்து திருவள்ளூர் அணியின் 80 ரன்களில் 65 ரன்களை இவர் மட்டுமே அடித்திருந்தார்.
வேகப்பந்து வீச்சாளர்களை பின்னால் சென்று கட், புல்ஷாட்களை ஆடிய அபராஜித், ஸ்பின்னர்களை மேலேறி வந்து தாக்கினார். மற்ற வீரர்கள் நிற்காத போதும் அபராஜித் 81 ரன்களை எடுக்க 14-வது ஓவரில் 100 ரன்களை எட்டியது திருவள்ளூர்.
கடைசி 4 ஓவர்களில் 36 ரன்கள் தேவை என்ற நிலையில், சி.கணபதி ஓவரில் அபராஜித் 2 தொடர்ச்சியான சிக்சர்களை விளாசினார். இதன் மூலம் 56 பந்துகளில் சதம் கண்டார். கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் அபராஜித் 14 ரன்களை விளாசி வெற்றிக்கு இட்டுச் சென்றார். கடைசியில் அபராஜித்துக்கு உறுதுணையாக நின்ற மலோலன் ரங்கராஜன் 30 ரன்கள் எடுக்க 18.4 ஓவர்களில் 167/5 என்று திருவள்ளூர் வெற்றி பெற்றது.
காரைக்குடி காளை அணியில் ஆர்.சீனிவாசன் 50 ரன்களையும், எம்.விஜய் குமார் 43 ரன்களையும், ஆர்.ராஜ்குமார் 34 ரன்களையும் எடுத்தனர். அந்த அணி 165/6 என்று நல்ல ஸ்கோரை எட்டியது.
அண்டர் 19 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவில் கலக்கிய பாபா அபராஜித் தமிழகத்திலிருந்து இந்தியாவுக்கு ஆடும் அடுத்த வீரராக இருப்பார் என்று பலராலும் கருதப்பட்டது, இந்நிலையில் ஐபிஎல் வாய்ப்பு அவருக்கு அதன் முதற்படியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 2013-ம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வான பாபா அபராஜித் 3 ஆண்டுகளாக ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பளிக்கப்படாமல் வெறுப்பேற்றப்பட்டார்.
ஆனால் இவரது விதி நிழலாய் பின் தொடர அதே தோனி தலைமையில் கடந்த ஐபிஎல் போட்டிகளில் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தேர்வானார். ஆனால் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. கடைசி ஐபிஎல் கிரிக்கெட்டில் புனே அணி கடுமையாக தோல்விகளைச் சந்தித்த போதும், பலர் காயமடைந்து விலகிய போதும் ஏனோ தோனியின் பார்வை அபராஜித் பக்கம் செல்லவில்லை. 4 ஆண்டுகளாக வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் தமிழ்நாடு பிரிமியர் லீகில் அபார சதம் எடுத்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.