Published : 19 Apr 2017 09:10 AM
Last Updated : 19 Apr 2017 09:10 AM

தொழில்முறை டி20-ல் 10 ஆயிரம் ரன்கள் குவிப்பு: கிறிஸ் கெய்ல் சாதனையுடன் பெங்களூரு வெற்றி

ஐபிஎல் தொடரில் நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார். பெங்களூரு அணியில் காயம் காரணமாக டிவில்லியர்ஸ், சாமுவேல் பத்ரி ஆகியோர் களமிறங்கவில்லை.

இவர்களுக்கு பதிலாக கிறிஸ் கெய்ல், டிரெவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினார்கள். குஜராத் அணியில் 3 மாற்றங்கள் இருந்தது. ஜேசன் ராய், பிரவீன் குமார், முனாப்படேல் ஆகியோர் நீக்கப்பட்டு ஆரோன் பின்ச், ஷிவில் கவுசிக், தவல் குல்கர்னி ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.

பெங்களூரு அணிக்கு விராட் கோலி சிறப்பான தொடக்கம் கொடுத்தார். குல்கர்னி வீசிய 3-வது ஓவரில் அவர், தொடர்ச்சியாக 3 பவுண்டரிகளை விரட்டினார். மறுமுனையில் கெய்ல் நிதானமாக விளையாடி னார். அவர் 3 ரன்களை சேர்த்த போது தொழில்முறை டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார்.

இதன் மூலம் தொழில்முறை டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை கெய்ல் படைத்தார். இந்த சாதனையை அவர் 290-வது ஆட்டத்தில் படைத்துள்ளார். அவர் 18 சதங்களும், 61-வது அரை சதங்களும் அடித்துள்ளார்.

பாசில் தம்பி ஓவரில் சிக்ஸர் அடித்த கெய்ல் அதன் பின்னர் அதிரடியாக விளையாட தொடங்கினார். பவர் பிளேவில் 45 ரன்கள் சேர்க்கப்பட்டது. ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் கெய்ல் தொடர்ச்சியாக 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் விளாசினார். அடுத்த பந்தையும் அவர் சிக்ஸருக்கு தூக்கினார். ஆனால் இதனை நம்பமுடியாத வகையில் எல்லை கோட்டுக்கு அருகே மெக்கலம் டைவ் அடித்து ஒற்றை கையால் பிடித்தார்.

ஆனால் அவரது தொப்பி எல்லை கோட்டை உரசியதால் இது சிக்ஸர் என அறிவிக்கப் பட்டது. இந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் விளாசப்பட்டது. கவுசிக் வீசிய 10-வது சிக்ஸர் விளாசிய கெய்ல் 23 பந்துகளில் அரை சதம் அடித்தார். கெய்லின் அதிரடியால் பெங்களூரு அணி 10.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது.

38 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 77 ரன்கள் விளாசிய நிலையில் பாசில் தம்பி வீசிய யார்க்கரால், கெய்ல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 12.4 ஓவரில் 122 ஆக இருந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய டிரெவிஸ் ஹெட்டும், கோலியுடன் இணைந்து அதிரடியாக விளை யாடினார். விராட் கோலி 43 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். கவுசிக் வீசிய 15-வது ஓவரில் டிரெவிஸ் ஹெட்டும், கோலியும் தலா ஒரு சிக்ஸர்கள் பறக்கவிட்டனர்.

ஆனால் அடுத்த ஓவரில் குல்கர்னி பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார். அவர் 50 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் சேர்த்தார். 16 ஓவர்களில் 160 ரன்கள் குவிக்கப்பட்ட நிலையில் 17-வது ஓவரை வீசிய ஆன்ட்ரூ டை 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

கடைசி கட்டத்தில் கேதார் ஜாதவ், டிரெவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 3 ஓவர்களில் 47 ரன்கள் விளாச பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. கேதார் ஜாதவ் 16 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 38 ரன்களும், டிரெவிஸ் ஹெட் 16 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

214 ரன்கள் இலக்குடன் பேட் செய்த குஜராத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந் தது. டுவைன் ஸ்மித் 1 ரன்னில் யுவேந்திரா சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங் கிய ரெய்னா 8 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இந்த விக்கெட் டையும் யுவேந்திரா சாஹல் கைப்பற்றினார்.

37 ரன்களுக்கு 2 விக்கெட் களை இழந்த நிலையில் அடுத்து களமிறங்கிய ஆரோன் பின்ஞ்சுடன் இணைந்து மெக்கலம் அதிரடியாக விளையாடினார். பவர் பிளேவில் 57 ரன்கள் சேர்க்கப்பட்டது. மெக்கலம் 30 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் அரை சதம் அடித்தார். அவரது அதிரடியால் குஜராத் அணி 10 ஓவர்களில் 103 ரன்கள் சேர்த்தது.

ஆரோன் பின்ச் 19 ரன்கள் எடுத்த நிலையில் பவன் நெகி பந்தில் ஸ்டெம்பிங் ஆனார். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 1 ரன்னில் அர்விந்த் பந்தில் நடையை கட்டினார். அடுத்தடுத்து இரு விக்கெட்கள் சரிந்த போதும் மெக்கலம் ரன்வேட்டை நிகழ்த்தினார்.

மறுமுனையில் ஜடேஜா நிதானமாக விளையாடினார். 33 பந்துகளில் வெற்றிக்கு 77 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் யுவேந்திரா சாஹல் பந்தில் மெக்கலம் ஆட்டமிழந்தார். அவர் 44 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் சேர்த்தார்.

மந்தமாக விளையாடிய ஜடேஜா 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அர்விந்த் வீசிய 19-வது ஓவரில் இளம் வீரரான இஷான் கிஷன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாச ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவை என்ற நிலை உருவானது. இந்த ஓவரை ஆடம் மில்னே வீசினார். முதல் பந்தில் 2 ரன்கள் சேர்த்த ஆன்ட் ரூ டை அடுத்த பந்தை வீணடித்தார். 3-வது பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட்டது.

4-வது பந்தில் இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அவர் 16 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார். கடைசி இரு பந்துகளில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. முடிவில் குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 192 ரன்கள் எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது வெற்றியை பதிவு செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x