

அடுத்த ஆண்டு ஜனவரி 5 முதல் 11 வரை நடைபெறவுள்ள 20-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதை உலகின் 14-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ஃபெலிஸியானோ லோபஸ் உறுதி செய்துள்ளார்.
தெற்காசிய மற்றும் இந்தியாவின் ஒரே ஏடிபி போட்டியான சென்னை ஓபனில் லோபஸ் முதல்முறையாக பங்கேற்கவுள்ளார். கடந்த விம்பிள்டன் போட்டியில் 4-வது சுற்று வரை முன்னேறியவரான லோபஸ், அமெரிக்காவில் தொடர்ந்து 5 முறை 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதுதவிர ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டியில் உலகின் 2-ம் நிலை வீரரான நடாலை தோற்கடித்துள்ளார். 1997-ம் ஆண்டு தொழில்முறை வீரராக உருவெடுத்த லோபஸ், இதுவரை 4 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். சென்னை ஓபனில் பங்கேற்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள லோபஸ், “2015-ம்
ஆண்டு சீசனை சிறப்பாக தொடங்குவதற்கு சென்னை ஓபன் நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும். இந்தப் போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்வதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். சென்னை நகரில் விளையாடுவதையும், அடுத்த சீசனை சிறப்பாக தொடங்குவதையும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.