Published : 19 Dec 2013 09:56 PM
Last Updated : 19 Dec 2013 09:56 PM

இந்திய பவுலர்கள் அதிரடி: தென் ஆப்பிரிக்கா 213/6

இந்தியா தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்தியா 280

முன்னதாக இன்றைய ஆட்டத்தை தொடர்ந்த இந்தியா வீரர்களால், நேற்றைய ஸ்கோரான 255 ரன்களுக்கு மேல் வெறும் 25 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தோனி வெறும் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அரை சதம் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த ரஹானே 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தவர்களுமே வந்த வேகத்தில் பெவிலியனுக்குத் திரும்ப, 280 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்க அணிக்காக ஃபிலாண்டர் 4 விக்கெட்டுகளையும், மார்கல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

தென் ஆப்பிரிக்கா நிதானம்

அடுத்து தனது முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிர்க்கா நிதானமாக ரன்களை சேர்த்தது. துவக்க ஆட்டக்காரர்கள் ஸ்மித்தும் பீட்டர்சனும் பதட்டமின்றியே காணப்பட்டனர். உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்திருந்தது. இடைவேளைக்கு பிறகு சில ஓவர்களிலேயே பீட்டர்ச்சன் இஷாந்த் சர்மாவின் பந்தில் 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித்தும், அடுத்து களமிறங்கிய ஆம்லாவும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் அவசரப்படாமல் ஆடினாலும், மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை. 98 பந்துகளில் ஸ்மித் அரை சதத்தைக் கடந்தார்.

தேனீருக்கு பின் மாறிய போக்கு

தேனீர் இடைவேளை வரை இந்த ஜோடி நிலைத்து ஆடினர். ஸ்மித் 62 ரன்களுடனும், ஆம்லா 30 ரன்களுடனும் ஆட்டம் தொடர, 3 ஓவர்கள் கழித்து இஷாந்த் சர்மா வீசிய ஆட்டத்தின் 38-வது ஓவர் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது. அந்த ஓவரின் முதல் பந்தில் ஆம்லாவை அவுட்டாக்கிய இஷாந்த், அடுத்த பந்திலேயே நட்சத்திர வீரர் காலிஸையும் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார். உற்சாகம் அனைத்து இந்திய வீரர்களையும் தொற்றிக் கொள்ள ஆட்டம் சூடு பிடித்தது.

இஷாந்தை தொடர்ந்த ஷமி, ஜாகீர்

அடுத்த ஓவரிலேயே கேப்டன் ஸ்மித்தை 68 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார் ஜாகீர் கான். நன்றாக ஆடிவந்த இரண்டு பேட்ஸ்மேன்களும் அவுட்டாக இரண்டு புதிய வீரர்கள் களத்தில் இருந்தனர். சில ஓவர்கள் கழித்து பந்து வீசவந்த ஷமியும், தன் பங்குக்கு ஒரே ஓவரில் டுமினி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்போது தென் ஆப்பிரிக்காவின் ஸ்கோர் 146 ரன்கள் மட்டுமே. அதற்குள் 6 விக்கெட்டுகளை அந்த அணி இழந்திருந்தது.

ஃபிலாண்டர் - ப்ளெஸிஸ்

பின்பு ஆட வந்த பந்து வீச்சாளர் ஃபிலாண்டர், ப்ளெஸிஸுடன் ஜோடி சேர்ந்த அணியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். இந்திய பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆடிய இருவருக்கும் விக்கெட்டை காப்பாற்றிக் கொள்வதே முக்கியமானதாக இருந்தது. ஆனால் பின்னர் சுதாரித்த இரு பேட்ஸ்மேன்களுமே கொஞ்சம் கொஞ்சமாக ரன்களை எடுக்க ஆரம்பித்தனர்.

பந்து வீச்சாளர்களை தோனி மாற்றியபோதும், இருவரும் சளைக்கவில்லை. 200 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்துவிடும் என்ற நிலையிலிருந்து, சுலபமாக 200 ரன்களை அந்த அணி கடந்தது. ஃபிலாண்டர் - ப்ளெஸிஸ் இடையே பார்ட்னர்ஷிப்பும் 50 ரன்களைக் கடந்தது. ப்ளெஸிஸ் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் பந்தில் ஸ்லிப் பகுதிக்கு வந்த கேட்ச்சை ரோஹித் சர்மா தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசி வரை இருவரையும் ஆட்டமிழக்கச் செய்ய வகுத்த வியூகங்கள் பலிக்காமல் போக, இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 213 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணியை விட 67 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஃபிலாண்டர் 48 ரன்களுடனும், ப்ளெஸிஸ் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை சீக்கிரமாக ஆட்டமிழக்கச் செய்து இந்திய அணி ஆடப்பார்க்கும் எனத் தெரிகிறது.

கடைசி ஒரு மணி நேர ஆட்டத்தை, ப்ளெஸிஸ் மற்றும் ஃபிலாண்டர் ஆக்கிரமித்திருந்தாலும் அன்னிய மண்ணில் இந்திய வேகப் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டது இந்திய அணிக்கு கண்டிப்பாக புது நம்பிக்கையை அளித்திருக்கும். ஜோகன்னஸ்பர்கில் நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 2.30 மணிக்குத் தொடங்குகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x