

ஆசிய பீச் கபடிப் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய ஆடவர் அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற அவருடைய பத்தாண்டு கனவு நனவாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் சூலியாகோட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் புரோ கபடி லீக்கில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனின் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை சாம்பியனாக்கினார். அதைத் தொடர்ந்து இப்போது இந்திய அணிக்கு பயிற்சியளிக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
புரோ கபடி லீக்கில் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியனாகிய பிறகு ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளராக வேண்டும். அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என பாஸ்கரன் கூறியிருந்தார். அவர் கூறியதைப் போலவே இப்போது இந்திய அணியின் பயிற்சி யாளராகியுள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை இந்திய அமெச்சூர் கபடி சம்மேளனம் அனுப்பியுள்ளது.
கபடி வீரராக
தஞ்சாவூரில் உள்ள செவன் ஸ்டார் கிளப்புக்காக கபடி ஆடத் தொடங்கிய பாஸ்கரன், பின்னர் தமிழக அணியில் இடம்பிடித்தார். 1992 முதல் 1994 வரையிலான காலங்களில் தேசிய அளவிலான கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணியில் பாஸ்கரன் இடம்பெற்றுள்ளார். 1994-ல் ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தவர்களில் பாஸ்கரனும் ஒருவர்.
1995 முதல் 1998 வரை தமிழக அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். 1995-ல் சென்னையில் நடைபெற்ற தெற்கா சிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய கபடி அணியின் கேப்டனாக பாஸ்கரன் இருந்திருக்கிறார்.
பயிற்சியாளராக...
தமிழக ஆடவர் மற்றும் மகளிர் அணிக்கு பயிற்சியளித்துள்ளார். 2010-ல் தாய்லாந்து அணியின் தேசிய பயிற்சியாளராகவும், 2012-ல் மலேசிய அணியின் பயிற்சியாளராகவும் இருந் திருக்கிறார். இதுதவிர புரோ லீக்கில் பாஸ்கரனின் பயிற்சியின் கீழ் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி சாம்பியனாகியுள்ளது.
4-வது ஆசிய பீச் கபடிப் போட்டி வரும் நவம்பர் 19 முதல் 22 வரை தாய்லாந்தின் புக்கட் நகரில் உள்ள படோங் கடற்கரையில் நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான பயிற்சி முகாம் வரும் 25-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை பெங்களூரில் உள்ள சாய் மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 10 பேருக்கு பாஸ்கரன் பயிற்சியளிக்கிறார். அதிலிருந்து 6 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்படுகிறது. அந்த அணி நவம்பர் 16-ம் தேதி டெல்லியிலிருந்து தாய்லாந்து புறப்படுகிறது.
10 ஆண்டு கனவு நனவானது
இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டது குறித்துப் பேசிய பாஸ்கரன், “2004-ல் என்.ஐ.எஸ். (பயிற்சியாளருக்கான படிப்பு) படிப்பை முடித்தது முதலே இந்திய அணிக்கு பயிற்சியளிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் ஏற்பட்டது. எனது 10 ஆண்டுகால பயிற்சியாளர் கனவு இப்போது நனவாகியிருப்பது மகிழ்ச்சியையும், பெருமை யையும் தந்துள்ளது.
கடந்தமுறை நடைபெற்ற ஆசிய பீச் கபடி போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வி கண்டது. அதனால் இந்த முறை சிறப்பாக ஆடி சாம்பியனாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பாகிஸ்தான், ஈரான் ஆகியவை வலுவான அணிகள் ஆகும். எனவே இந்த முறை கடும் சவால் இருக்கும். ஆனால் சிறப்பாக பயிற்சியளித்து இந்திய அணியை சாம்பியனாக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக் கிறது.
இந்தப் போட்டியில் இந்தியாவை சாம்பியனாக்கி விட்டால் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடர முடியும். எனவே இப்போது கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பை பயன்படுத்தி சாதிக்க முயற்சிப்பேன் என்றார்.
இதற்கு முன்னர் பீச் கபடி அணிக்கு பயிற்சியளித்திருக்கிறீர்களா என்று கேட்டபோது, “2012 ஆசிய பீச் கபடி போட்டிக்காக நடைபெற்ற பயிற்சி முகாமில் இந்திய அணிக்கு பயிற்சியளித்த இருவரில் நானும் ஒருவன். மலேசிய தேசிய பீச் கபடி அணி உள்ளிட்ட சில அணிகளுக்கு பயிற்சியளித்திருக்கிறேன்” என்றார்.