

வரவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் அதிரடி வீரர்கள் டி காக், டுமினி ஆகியோர் காயம் காரணமாக விலகியதையடுத்து டெல்லி அணிக்கு அது பின்னடைவே என்று பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
“டுமினி, டி காக் போன்ற திறமையுடைய வீரர்களை இழப்பது என்பது நிச்சயம் பின்னடைவே. ஏலத்துக்கு முன்னதாகவே இது தெரியும்பட்சத்தில் எளிதாக இருந்திருக்கும், ஏனெனில் நாம் அதற்குத் தக்கவாறு திட்டமிடலாம். ஆனால் இவை இப்படித்தான் போகும், இதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை.
ஆனால் சாம் பில்லிங்ஸ் போன்ற திறமையான வீரர்கள் உள்ளனர் அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.
கடந்த ஐபிஎல் தொடரில் டி காக் டேர் டெவில்ஸ் அணியில் அதிகபட்சமாக ரன்கள் குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கோரி ஆண்டர்சன், இலங்கையின் ஆஞ்செலோ மேத்யூஸ் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.
“ஸ்ரேயஸ் ஐயர், கருண் நாயர், சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் அரையிறுதிக்கு அணியை இட்டுச் செல்வர் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார் திராவிட்.