ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்ல வாய்ப்பு: பி.டி.உஷா நம்பிக்கை

ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனைகள் பதக்கம் வெல்ல வாய்ப்பு: பி.டி.உஷா நம்பிக்கை
Updated on
1 min read

பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீராங்கனைகள் டின்டு லுகா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக இந்தியாவின் தங்க மகளாக கருதப்பட்ட பி.டி.உஷா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

தடகளத்தில் யாரும் பதக்கம் வெல்வார்கள் என்று நாம் உறுதியாக கூறமுடியாது. ஒலிம்பிக்கில் கலந்துகொள்வதே பெருமையான விஷயம். டின்டு லுகா, லலிதா பாபர், சுதா சிங் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதுவும் இவர்கள் 3 பேரும் தங்களது சிறந்த திறனை வெளிப்படுத்துவதை பொறுத்துதான் அமையும்.

டின்டு, சுதா, லலிதா ஆகிய 3 பேரும் ரியோ ஒலிம்பிக்கில் 200 மீட்டர் ஓட்டம், 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபில்சேஸ் ஓட்டத்தில் பங்கேற்கின்றனர்.

பி.டி.உஷா 1984-ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 4-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடவர் மற்றும் மகளிர் 4 X 400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இந்தியா இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உள்ளது. டிரிப்பிள் ஜம்ப்பிலும் இந்தியாவின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. யார் பதக்கத்தை வென்று கொடுப்பார்கள் என்பதை என்னால் கூற முடியவில்லை. எல்லாம் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

100 மீட்டர் ஓட்டத்தில் டுட்டி சந்த் பந்தய தூரத்தை 11.21 விநாடிகளில் கடந்தால் நிச்சயம் அரையிறுதிக்கு முன்னேறிவிடுவார். தற்போது அவருடைய சிறப்பான ஓட்டம் 11.26 விநாடிகளாக உள்ளது. நான் அவருக்கு எந்தவித நெருக்கடியும் கொடுக்க விரும்பவில்லை. ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்துக்கு தகுதி பெற்றதே பெரிய சாதனைதான். இந்த முறை அதிக அளவில் இந்திய வீரர்கள், ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்ட முயற்சிக்க வேண்டும். அப்போது தான் நாம், அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்று கூற முடியும்.

இவ்வாறு கூறினார் பி.டி.உஷா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in