விளையாட்டு செய்தித்துளிகள்: விராட் கோலி உழைப்பு

விளையாட்டு செய்தித்துளிகள்: விராட் கோலி உழைப்பு
Updated on
2 min read

# ஒரு கிரிக்கெட் வீரராக எனது முன்னேற்றத்திற்காக நான் கடினமாக உழைக்கிறேன். ஒவ்வொரு நாளும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். ஆடுகளத்தில் புதிதாக ஏதாவது செய்ய முயற்சிக்கிறேன். 7 ஆயிரம் ரன்னை அதிகவேகமாக கடக்க வேண்டும் என திட்டமிடவில்லை. என்னுடைய திட்டம் எல்லாம் அதிக அளவு ரன்கள் குவிக்க வேண்டும், அதன்மூலம் அணிக்கு நல்ல முடிவு கிடைக்க வேண்டும் என்பதுதான். நான் சாதனையை எண்ணவில்லை. ஆனால், கடவுள் இந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறார் என்று விராட் கோலி தெரிவித்தார்.

# மலேசிய ஓபன் பாட்மிண்டன் போட்டி பினாங்கு நகரில் இன்று தொடங்குகிறது. பிரிமியர் பாட்மிண்டன் லீக் தொடரில் பங்கேற்ற இந்திய வீரர்கள் சிறிது ஓய்வுக்கு பின்னர் மலேசிய போட்டியில் பங்கேற்கின்றனர். ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, காந்த், அஜய்ராம், ஷமீர் வர்மா, ஷாய் பிரனீத், சுபன்ஹர் தே பங்கேற்கின்றர். ஜூவ்லா கட்டா, அஸ்வினி பொன்னப்பா இரட்டையர் பிரிவில் கலந்து கொள்கின்றனர்.

# முஸ்டாக் அலி டி 20 தொடரின் இறுதிப்போட்டியில் இன்று பரோடா-உத்தரபிரதேசம் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 6.30 மணிக்கு மும்பையில் நடைபெறுகிறது.

# ஜூன் 6ம் தேதி லார்ட்ஸில் நடைபெறும் கருத்தரங்கில் நியூஸிலாந்தின் மெக்கலம் உரையாற்றுகிறார். இந்த உரையை நிகழ்த்தும் 2வது நியூஸி. வீரர் இவர் ஆவார். 2006ல் மார்ட்டின் குரோவ் உரையாற்றியிருந்தார்.

# 8வது சென்னை ஒபன் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த கிருஷ்ணன், ரஷ்யாவின் கிராண்ட் மாஸ்டர் போரிஸ் கிரஷெவை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 29வது காய் நகர்த்தின் போது டிராவில் முடிவடைந்தது.

# மந்தமாக செயல்படும் (பிளாட் பிட்ச்) ஆடுகளங்களால் பந்து வீச்சாளர்களுக்கு தான் நெருக்கடி ஏற்படுகிறது. இதுபோன்ற ஆடுகளங்களில் எவ்வளவு சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினாலும் பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்துவிடுவார்கள் என வார்னர் தெரிவித்துள்ளார்.

# இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் அணி விரும்பும் எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக உள்ளேன். தற்போது என்னுடைய கவனம் எல்லாம் அணியில் இடம்பிடிக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது என்று ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

# நான் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடியதாக சிலர் நினைக்கலாம். ஆனால் இந்த நினைவுகள் எப்போதும் என்னுடன் இருக்கும். நான் உலகத்தின் பல்வேறு தொடர்களில் ஆடுகிறேன். அதில் பிக்பாஷும் ஒன்று. பல முன்னாள் வீரர்கள் நேரில் பார்க்கும்போது நன்றாக சிரித்துப் பேசுவார்கள். ஆனால் பின்னால் வேறு மாதிரி பேசுவார்கள். அவர்களது ஆதரவுக்கும் நன்றி என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

# மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இலங்கை அணியின் இரு வீரர்களை சூதாட்ட தரகர்கள் அணுகிய விவகாரம் தொடர்பாக கேப்டன் மேத்யூஸ் நேற்று அந்நாட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார்.

# முன்னணி டென்னிஸ் வீரரான செர்பியாவின் ஜோகோவிக்கை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர் கோக்கீனாக்கீஸ், இங்கிலாந்தின் அர்விந்த் பார்மர் ஆகியோரும் தங்களை சூதாட்டத்தரகர்கள் அணுகியதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதற்கிடையே இங்கிலாந்தின் ஆன்டி முர்ரே சூதாட்டத்தை ஒழிக்கும் விவகாரத்தில் வெளிப்படையான நடவடிக்கை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in