

ரஞ்சி கோப்பை சாம்பியனான குஜராத் அணிக்கும், ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கும் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது.
போட்டியின் 2-வது நாளான நேற்று குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 102.5 ஓவர்களில் 358 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக காந்தி 202 பந்துகளில், 22 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 169 ரன்கள் எடுத்தார்.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி சார்பில் சித்தார்த் கவுல் 5, பங்கஜ் சிங் 4 விக்கெட்கள் கைப்பற்றினர். இதையடுத்து பேட் செய்த ரெஸ்ட் ஆப் இந்தியா நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 72 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.
கேப்டன் புஜாரா 86, ஹெர் வாத்கர் 48 ரன்கள் சேர்த்தனர். அபிநவ் முகுந்த் 8, கருண் நாயர் 28, மனோஜ் திவாரி 12, விருத்திமான் சாஹா 0, குல்தீப் யாதவ் 5, நதீம் 0, சித்தார்த் கவுல் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ஒரு கட்டத்தில் 166 ரன்களுக்கு 4 விக்கெட்களை மட்டுமே இழந்த நிலையில் அடுத்து 26 ரன்கள் சேர்ப்பதற்குள் மேலும் 5 விக்கெட்களை இழந்து சரிவை சந்தித்தது ரெஸ்ட் ஆப் இந்தியா அணி.
குஜராத் அணி தரப்பில் கஜா, ஹர்திக் படேல் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் கைப்பற்றினர். பங்கஜ் சிங் 7, முகமது சிராஜ் 8 ரன்களுடன் களத்தில் இருந்தனர். 152 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருக்க ரெஸ்ட் ஆப் இந்தியா அணி இன்று 3-வது நாள் ஆட்டத்தை விளையாடுகிறது.