

டி20 உலகக் கோப்பை 2-வது அரையிறுதியில், தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
அசத்தலான பேட்டிங் மூலம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்ட விராட் கோலி ஆட்ட நாயகனாகத் தேர்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டியில் 173 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு, துவக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும், ரஹானேவும் சிறப்பான துவக்கத்தைத் தந்தனர். ஆனால், 10 ஓவர்கள் முடியும் முன்னரே ரோஹித் 24 ரன்களுக்கும், ரஹானே 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். தொடர்ந்து யுவராஜ் சிங்குடன் இணைந்த கோலி அணியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல முயற்சி செய்தார்.
தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களை இந்த இணை எளிதாக சமாளித்து ஆடினாலும், பவுண்டரிகளும், சிக்ஸர்களும் வருவது கடினமாகவே இருந்தது. விராட் கோலி 35 பந்துகளில் அரை சதம் கடந்தார். அவர் அரை சதம் கடந்த ஓவரிலேயே யுவராஜ் சிங் 18 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய ரெய்னா பர்னல் வீசிய 17-வது ஓவரில் 17 ரன்கள் அடிக்க 3 ஓவர்களில் 23 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கட்டம் வந்தது. ஸ்டெய்ன் வீசிய 18-வது ஓவரில் கோலி 2 பவுண்டரிகள் அடித்து 2 ஓவர்களில் 10 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சூழலுக்கு ஆட்டத்தை எடுத்து வந்தார். அடுத்த ஓவரிலேயே ரெய்னா 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும், 19.1 ஓவரில் இந்தியா வெற்றி இலக்கை அடைந்தது.
கோலி 44 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை இந்தியா சந்திக்கவுள்ளது.
முன்னதாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த தென் ஆப்பிரிக்கா, முதல் ஓவரிலேயே துவக்க வீரர் டி காக் விக்கெட்டை பறிகொடுத்தது.
மோஹித் சர்மா வீசிய ஆட்டத்தின் 4-வது ஒவரில் 17 ரன்கள் அடித்த தென் ஆப்பிரிக்கா, அந்த ஓவரிலிருந்து வேகமான ரன் குவிப்பை ஆரம்பித்தது. ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறு முனையில் இருக்கும் வீரர்கள் இந்தியர்களின் பந்துவீச்சை விளாசினர்.
சிக்ஸர்களும், பவுண்டரிகளும் எளிதாக வர ஆரம்பித்தன. இதனால் 20 ஓவர்கள் முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 41 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார். இந்தியாவின் தரப்பில், அஸ்வின் 22 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.