

பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் 2-வது சுற்று போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.
கனடாவில் உள்ள வெஸ்ட் வான்கூவர் நகரில் பெண்களுக்கான உலக ஹாக்கி லீக் போட்டியின் 2-வது சுற்று நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பெலாரஸை எதிர்கொண்டது. இப்போட்டியின் ஆரம்பம் முதலே பெலாரஸ் மீது இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 13-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத்தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ராணி, 20 மற்றும் 40-வது நிமிடங்களில் கோல் அடித்து இந்தியாவின் முன்னிலையை அதிகப்படுத்தினார். 58-வது நிமிடத்தில் குர்ஜித் கவுர் மேலும் ஒரு கோலை அடிக்க, இந்திய அணி 4-0 என்ற கோல்கணக்கில் வென்று இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சிலியை எதிர்த்து ஆடவுள்ளது. முன்னதாக நேற்று நடந்த மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் சிலி அணி 2-1 என்ற கோல்கணக்கில் உருகுவேயை வீழ்த்தியது.