

துபையில் நடைபெற்ற துபை “டியூட்டி ப்ரீ” டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவருடைய 45-வது டபிள்யூடிஏ பட்டமாகும்.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில் சர்வதேச தரவரிசையில் 44-வது இடத்தில் உள்ளவரான வீனஸ் வில்லியம்ஸ் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள பிரான்ஸின் அலைஸ் கார்னட்டைத் தோற்கடித்தார்.
வைல்ட்கார்ட் மூலம் விளையாடிய வீனஸ், துபை போட்டியில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதற்கு முன்னர் அவர் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் துபை டென்னிஸ் போட்டியில் சாம்பியனாகியுள்ளார். இது தவிர துபையில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளிலும் வீனஸ் வெற்றி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வெற்றி கண்டிருப்பதன் மூலம் வீனஸ் தரவரிசையிலும் முன்னேற்றம் கண்டுள்ளார். இன்று புதிய தரவரிசைப் பட்டியல் வெளியாகும்போது வீனஸ் 29-வது இடத்திற்கு முன்னேறுவார். கடைசியாக 2012-ல் நடைபெற்ற லக்ஸம்பர்க் போட்டியில் பட்டம் வென்ற வீனஸ், அதன்பிறகு இப்போதுதான் அடுத்த பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.