

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் வாழ்க்கை ஒன்றும் மோசமாகிவிடாது என்று காலிஸிடம் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் ஜேக்ஸ் காலிஸ், டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவரைப் புகழ்ந்து ட்விட்டரில் சச்சின் கூறியது: கிரிக்கெட்டை உண்மையான உத்வேகத்துடன் விளையாடி வந்தீர்கள். உங்களுக்கு எதிராக விளையாடியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சிகரமான அனுபவமாகவே இருந்தது. காலிஸ் நீங்கள் உண்மையாகவே கிரிக்கெட் சாம்பியன்தான். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் வாழ்க்கை ஒன்றும் மோசமாகிவிடாது என்று சச்சின் கூறியுள்ளளார்.
சச்சின் சமீபத்தில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஓய்வு வாழ்க்கை மோசமானதல்ல என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார். 38 வயதாகும் காலிஸ் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 1995-ல் இங்கிலாந்துக்கு எதிராக முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் காலிஸ் பங்கேற்றார். டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் (15,921 ரன்கள்), பாண்டிங் (13,378 ரன்கள்) ஆகியோருக்கு அடுத்தபடியாக காலிஸ் (13,289 ரன்கள்) 3-வது இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதமடித்ததில் சச்சினுக்கு (51 சதம்) அடுத்தபடியாக காலிஸ் (45 சதம்) உள்ளார். அவரது சராசரி 55.37. 292 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.