வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கு நவீன பயிற்சியாளர்களே காரணம்: ஆன்டி ராபர்ட்ஸ் சாடல்

வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதற்கு நவீன பயிற்சியாளர்களே காரணம்: ஆன்டி ராபர்ட்ஸ் சாடல்
Updated on
1 min read

வலைப்பயிற்சியில் 30 பந்துகளுக்கு மேல் வேகப்பந்து வீச்சாளர்களை வீச அனுமதிக்காத நவீன பயிற்சியாளர்களே பவுலர்கள் காயமடைவதற்குக் காரணம் என்று மே.இ.தீவுகள் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ராபர்ட்ஸ் சாடியுள்ளார்.

மும்பையில் சச்சின் பஜாஜின் குளோபல் கிரிக்கெட் ஸ்கூல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராபர்ட்ஸ் அங்கு வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் உட்பட பல்வேறு கிரிக்கெட் தொடர்பான ருசிகரங்களை பகிர்ந்து கொண்டார்.

"நவீன கிரிக்கெட் பயிற்சியாளர்கள் முதலில் கிரிக்கெட் ஆடியுள்ளனரா? அல்லது இவர்கள் வேகமாகத்தான் பந்து வீசியதுண்டா? ஏனெனில் இவர்கள்தான் வேகப்பந்து வீச்சாளர்களை பயிற்சியில் 5 அல்லது 6 ஓவர்களை மட்டுமே வீசினால் போதும் என்று அறிவுறுத்துகின்றனர். ஆனால் கிரிக்கெட் ஆட்டம் என்பது வேறு, களத்தில் 20-21 ஓவர்களை ஒருநாளைக்கு வீச நேரும்போது பவுலர்கள் காயமடைகின்றனர்.

எனவே 20-21 ஓவர்களை நாளொன்றுக்கு வீசிப் பழக வேண்டும். நாங்களெல்லாம் 2 மணி நேரம் வலைப்பயிற்சியில் வீசுவோம். நான் எனது காலத்தில் 6 வாரங்கள் மட்டுமே பயிற்சி பெற்றேன். அதில் பந்து வீச்சை ஓடி வந்து எப்படி முடிப்பது என்பதை கற்றுக் கொண்டேன்.

தான் வீசியதிலேயே சிறந்த பேட்ஸ்மேன் யார் என்று கேட்ட போது, விவ் ரிச்சர்ட்ஸ், விவ் ரிச்சர்ட்ஸ் மற்றும் சுனில் கவாஸ்கர். ஆனால் பவுன்ஸ் பிட்ச்களில் ஆடுவதில் நான் கவாஸ்கரை விட ஜி.ஆர்.விஸ்வநாத்தையே சிறந்த பேட்ஸ்மென் என்று கருதுகிறேன்” என்றார்.

மேற்கிந்திய அணியின் சரிவு, அதன் முன்னணி வீரர்கள் அணியில் இடம்பெறாதது குறித்து கூறிய ராபர்ட்ஸ், “சிசிஐ-யிலிருந்து வெளியே வந்து ஐபிஎல் அலுவலகத்தில் நுழைந்து பாருங்கள் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.

எனினும் மே.இ.தீவுகள் கிரிக்கெட் இந்த அளவுக்கு சீரழிவுக்குச் சென்றது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக வாரியத்தை மட்டும் நான் குற்றம் கூறப்போவதில்லை. வீரர்கள் தங்கள் பொறுப்பெடுத்துக் கொண்டு தங்கள் ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்வது அவசியம் என்று கருதுகிறேன்” என்றார்.

மேலும், தங்கள் கால ஆஸ்திரேலிய நடுவர்கள் படுமோசம் என்ற ராபர்ட்ஸ், ஆட்ட நிர்ணய சூதாட்டம் என்பது கிரிக்கெட்டில் 1983 உலகக் கோப்பைக்குப் பிறகு வந்ததே, என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in