Published : 06 Jun 2017 09:45 AM
Last Updated : 06 Jun 2017 09:45 AM

நியூஸிலாந்துடன் இன்று மோதல்: அரை இறுதி முனைப்பில் இங்கிலாந்து அணி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கார்டிப் நகரில் நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் இங்கிலாந்து அணி அரை இறுதிக்கு முன்னேறும்.

ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்த இரு அணிகளுக்கும் இது 2-வது ஆட்டம் ஆகும். இங்கிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேச அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

இதன்மூலம் இந்த பிரிவில் 2 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் முதல் அணியாக ஏ பிரிவில் இருந்து அரை இறுதிக்கு முன்னேறும்.

நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இந்த ஆட்டம் மழை காரணமாக கைவிட்டப்பட்டததால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டிருந்தது.

நியூஸிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று முழு புள்ளியை பெற முயற்சிக்கக்கூடும். ஏனேனில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலை நியூஸிலாந்துக்கு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி முதல் ஆட்டத்தில் 306 ரன்கள் இலக்கை சர்வசாதாரணமாக எட்டிப்பிடித்தது. ஜோ ரூட் 133, அலெக்ஸ் ஹேல்ஸ் 95, கேப்டன் மோர்கன் 75 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர். இவர்களிடம் இருந்து மீண்டும் ஒரு சிறப்பான ஆட்டம் வெளிப்படக்கூடும்.

இன்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர் ஜேசன் ராய் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அவர் கடந்த 6 ஆட்டங்களில் ஒருமுறை கூட 20 ரன்களை தாண்டவில்லை. காயம் காரணமாக ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் விலகி இருப்பதும் இங்கிலாந்து அணிக்கு சற்று பின்னடைவாகவே கருதப்படுகிறது.

அவருக்கு பதிலாக அணியில் வேகப் பந்து வீச்சாளர் ஸ்டீவன் பின் சேர்க்கப்பட்டுள்ளார். எனினும் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித்து இடம் பெறவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிக நேர்த்தியாக பேட் செய்து சதம் அடித்தார். முதன்முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய லூக் ரான்ஜியும் அரை சதம் அடித்து நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளார்.

மார்ட்டின் கப்தில், ராஸ் டெய்லர், கோரே ஆண்டர்சன் ஆகியோரும் அதிரடிக்கு திரும்பும் பட்சத்தில் அணியின் பேட்டிங் மேலும் வலுப்பெறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சில் கடும் நெருக்கடி கொடுத் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, டிரென்ட் போல்ட் கூட்டணி மீண்டும் மிரட்ட தயாராக உள்ளது.

அணிகள் விவரம்

இங்கிலாந்து: மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஜேக் பால், ஷேம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ், லயிம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், டேவிட் வில்லி, ஸ்டீவன் பின், மார்க் வுட்.

நியூஸிலாந்து: வில்லியம்சன் (கேப்டன்), மார்டடின் கப்தில், ஜிம்மி நீஷாம், ராஸ் டெய்லர், ஜீத்தன் படேல், கோரே ஆண்டர்சன், டாம் லதாம், லூக் ரான்ஜி, டிரென்ட் போல்ட், மிட்செல் மெக்லீனகன், மிட்செல் சான்ட்னர், நீல் புரூம், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, காலின் டி கிராண்ட் ஹோம்.

படம்: ராய்ட்டர்ஸ்
நேரம் : பிற்பகல் 3
இடம் : கார்டிப்
நேரடி ஒளிபரப்பு : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x