

மலேசியாவில் உள்ள இபோவில் நடைபெற்ற வெண்கலப்பதக்கத்திற்கான சுல்தான் அஸ்லன் ஷா ஹாக்கி போட்டியில் நியூஸிலாந்து அணியை இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 3-ம் இடம் பிடித்தது.
இந்திய வீரர் ருபிந்தர்பால் சிங் 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளை தவறாமல் கோல்களாக 17 மற்றும் 27-வது நிமிடத்தில் மாற்றினார்.
48-வது நிமிடத்தில் மந்தீப் சிங் மிக அருமையாக ஒரு கிராச் செய்ய கோல் வாயிலில் எஸ்வி.சுனில் அதனை கோலாக மாற்றினார், இந்த தொடரில் சுனில் அடிக்கும் முதல் கோலாகும் இது. பிறகு கடைசி தருணத்தில் தல்வீந்தர் சிங் 4-வது கோலைத் திணித்து வெற்றியை உறுதி செய்தார்.
முன்னதாக 5-வது இடத்துக்கான ஆட்டத்தில் மலேசிய அணி ஜப்பானை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது
இன்றைய ஆட்டத்தை நேற்று மலேசியாவுக்கு எதிராக இந்தியா விளையாடியிருந்தால் இறுதிக்கு முன்னேறியிருக்கலாம், ஆனால் நேற்று ஏன் மந்தமாக ஆடினர், இன்று ஏன் சுறுசுறுப்பாக ஆடினர் என்பது பற்றி பயிற்சியாளர் தொடர் முடிந்து கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.