

ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 118 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். வில்வித்தை, தடகளம், பாட்மிண்டன், குத்துச்சண்டை, ஹாக்கி, கோல்ப், ஜிம்னாஸ்டிக், ஜூடோ, துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், நீச்சல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம் ஆகிய 15 விளையாட்டுகளில் 66 பிரிவுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்திய அணி இம்முறை இரட்டை இலக்க பதக்கத்தை குறிவைத்துள்ளது. துப்பாக்கி சுடுதலில் ஜித்து ராய், அபிநவ் பிந்த்ரா, ககன் நரங், ஹீனா சித்து, அயோனிகா பால், அபுர்வி சண்டிலா ஆகியோர் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
மல்யுத்தத்தில் களமிறங்கும் நர்சிங் யாதவ், யோகேஷ்வர் தத், வினேஷ், பபிதா குமாரி, சாஷிக் மாலிக் ஆகியோரும் நம்பிக்கை அளிப்பவர்களாக உள்ளனர்.
குத்துச்சண்டையில் ஷிவா தபா, விகாஷ் கிருஷ்ணன் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. வில்வித்தையில் பாம்பேலா தேவி, தீபிகா குமாரி, லட்சுமி ராணி மஜ்ஹி ஆகியோர் அதீத நம்பிக்கையுடன் உள்ளனர்.
டென்னிஸில் ரோகன் போபண்ணா, பயஸ் ஜோடி மற்றும் சானியா மிர்சா, போபண்ணா ஜோடி பதக்கம் வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. பாட்மிண்டனில் சாய்னா நெவால், பி.வி.சிந்து ஆகியோர் பதக்கங்களை கைப்பற்றக்கூடும். ஜிம்னாஸ்டிக்கில் 22 வயதான தீபிகா கர்மார்கர் சாதிக்கும் உத்வேகத்துடன் உள்ளார்.
ஹாக்கியில் 36 வருடங்களுக்கு பிறகு பதக்கம் வெல்லும் கனவுடன் ஜேஸ் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி ரியோ ஒலிம்பிக்கை சந்திக்கிறது. 112 வருடங் களுக்கு பிறகு ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட் டுள்ள கோல்ப் விளையாட்டில் இந்தியாவின் அனிர்பன் லஹிரி, எஸ்எஸ்பி சவுரசியா, அதிதி அசோக் ஜொலிக்க வாய்ப்புள்ளது.
தடகளத்தில் விகாஷ் கவுடா, ரெஜித் மகேஷ்வரி, லலிதா பாபர், சுதா சிங், ஓபி ஜெய்ஷா, டூட்டி சந்த் மற்றும் ஜூடோ வீரர் அவதார் சிங், பளுதூக்குதல் வீரர் சதீஷ் சிவலிங்கம் ஆகியோர் மீதும் எதிர்பார்ப்பு உள்ளது. லண்டன் ஒலிம்பிக்கில் இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்கள் கைப்பற்றியிருந்தது. இந்த எண்ணிக்கை இம்முறை அதிகரிக்க 120 கோடி மக்களில் நாமும் ஒருவராக வாழ்த்துவோம்.