Published : 20 Jun 2017 03:27 PM
Last Updated : 20 Jun 2017 03:27 PM

கர்நாடகாவை விட்டுச் செல்கிறார் ராபின் உத்தப்பா: கேரள அணிக்கு ஆட என்ஓசி

ராபின் உத்தப்பாவை கர்நாடக அணிக்காக தக்க வைக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய கேரளாவுக்கு அவர் ஆடுவதற்கான அனுமதியை கர்நாடக கிரிக்கெட் சங்கம் வழங்கிவிட்டது.

இதன் மூலம் 2002-ம் ஆண்டில் 17 வயது சிறுவனாக கர்நாடக அணியுடன் ராபின் உத்தப்பாவுக்கு இருந்து வந்த தொடர்பு இதனால் முடிவுக்கு வருகிறது.

130 முதல்தரப் போட்டிகளில் இதுவரை ஆடியுள்ள ராபின் உத்தப்பா அதில் 8793 ரன்களை 41.28 என்ற சராசரியில் 21 சதங்கள் 48 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதே போல் லிஸ்ட் ஏ போட்டிகளில் 175 ஆட்டங்களில் 5753 ரன்களை 14 சதங்கள், 30 அரைசதங்களுடன் எடுத்துள்ளார்.

ராபின் உத்தப்பா முடிவு குறித்து கர்நாடக கிரிக்கெட் சங்க இடைக்கால செயலரும் முன்னாள் வீரருமான சுதாகர் ராவ் கூறும்போது, “நான் ராபின் உத்தப்பாவுடன் நீண்ட வாதம் புரிந்தேன். அவர் கேரளாவுக்குச் செல்வதற்கான காரணங்கள் உள்ளன. அவரை தக்க வைக்க போதிய முயற்சிகள் செய்தோம், ஆனால் முடியவில்லை. ஆகவே அவர் கேட்ட என்.ஓ.சி-யைக் கொடுத்து விட்டோம். கர்நாடகா கிரிக்கெட்டுக்கு அவரது பங்களிப்பு அளப்பரியது, அவருடைய எதிர்காலத்திற்கு என் வாழ்த்துக்கள்” என்றார்.

கேரளா கிரிக்கெட் சங்கம் வெற்றிகரமான சர்வதேச கிரிக்கெட் பயிற்சியாளரான டேவ் வாட்மோரை கொண்டு வந்துள்ளது, அவரது பயிற்சியில் தான் மேலும் வளம்பெற முடியும் என்று உத்தப்பா கேரளாவுக்கு ஆடச் செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x