

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணிக்காக தமிழகத்தை சேர்ந்த நல்லப்பன் மோகன் ராஜ், தனபால் கணேஷ் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பின்கள ஆட்டக்காரரான மோகன் ராஜ் கடந்த இரு சீசன்களி லும் அட்லெடிகோ டி கொல்கத்தா அணிக்காக விளையாடினார். இந்த அணி 2014-ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கொல்கத்தா அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்ததால் தற்போது சென்னை அணியில் இணைந்துள்ளார். இவர் ஓராண்டு காலத்துக்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
நடுகள வீரரான கணேஷ் கடந்த சீசனில் புனே அணியில் இடம் பெற்றிருந்தார். கடந்த ஆண்டு வீரர்கள் ஏலத்தின் போது இவரை சென்னை அணி உள்நாட்டு வீரர்களில் முதல் நபராக தேர்வு செய்தது. ஆனால் தேசிய அணிக்காக விளையாடிய போது கணேஷ் காயம் அடைந்தார். இதனால் 2015-ம் ஆண்டு ஐஎஸ்எல் தொடர் முழுவதும் அவரால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது அவரை சென்னையின் எப்சி அணி நிரந்தர வீரர் என்ற அடிப்படையில் ஒப்பந்தம் செய்துள்ளது.
மோகன் ராஜ், நாமக்கல் மாவட்டம் காந்திரபுரத்தை சேர்ந்தவர். எஸ்டிஏடி மதுரை மற்றும் சென்னை சாய் சென்டர் மாணவர் விடுதியில் தங்கி பயின்ற அவர் இந்திய கால்பந்து அணிக்காக பல்வேறு வயது பிரிவுகளில் விளையாடி உள்ளார்.
19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். தொழில்முறை போட்டிகளில் முதன்முறையாக ஹெச்ஏஎல் பெங்களூரு அணிக்காக மோகன் ராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் அங்கிருந்து கொல்கத்தாவின் மோகன் பாகன் அணிக்கு மாறினார். அங்கு 5 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.
27 வயதான மோகன் ராஜ், ஐஎஸ்எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக 11 ஆட்டங்களில் விளையாடி உள்ளார். கடந்த சீசனில் கேரளா அணிக்கு எதிராக தனது முதல் கோலை அடித்திருந்தார்.
மோகன் ராஜ் கூறும்போது, "தொழில்முறை வீரராக நீண்ட காலம் விளையாடி வருகிறேன். சென்னை அணிக்காக விளையா டும் எனது கனவு தற்போது தான் நனவாகி உள்ளது. என் மீது நம்பிக்கை வைத்த அணி உரிமை யாளர்கள் மற்றும் பயிற்சியாளர் மார்கோ மெட்டராஸி ஆகியோ ருக்கு நன்றி தெரிவித்துக்கொள் கிறேன்" என்றார்.
தனபால் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர். சாய் மையத்தில் மோகன் ராஜுக்கு இவர் ஜூனியர் ஆவார். 25 வயதான தனபால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்திய அணிக்காக அறிமுக வீரராக களமிறங்கினார். ஈரான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் காயமடைந்ததால் கடந்த ஆண்டு ஐஎஸ்எல் தொடரில் பங்கேற்கவில்லை.